Archive for December, 2011

போராளி

“நாடோடிகள்” வெற்றி கூட்டணி எம்.சசிகுமாரும், பி.சமுத்திர கனியும் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் “போராளி!”

கதைப்படி, ஹீரோ சசிகுமாரையும், செகண்ட் ஹீரோ நரேஷையும் கும்மிருட்டில், கொட்டும் மழையில், கொலை வெறியோடு மூர்க்கத்தனமாக ஒருத்தர் துரத்த, அவரிடமிருந்து ஒருவழியாக தப்பி பிழைக்கும் இருவரும் சென்னையில், பொய் வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கிராமத்து நண்பன் கஞ்சா கருப்பு, தங்கியிருக்கும் அறைக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். அங்கு கருப்பு மட்டுமல்ல, அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மற்றவர்களும், இவர்கள் இருவருக்கும் அடைக்கலம் தர மறுக்க, ஹவுஸ் ஓனர், பேராசிரியர் ஞானசம்பந்தம் மட்டும் தீர்ப்பு நான் தான் சொல்வேன்… என்று, இருவரது முகத்திலும் ஒளி தெரிவதாக சொல்லி, கருப்புவின் அறையில் இவர்களை சேர்த்துக்கொள்ள சொல்வதுடன் சசிக்கு, தன்மகளையும் கட்டி தரும் முடிவில் இறங்குகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சிட்டிக்கு வந்த இருவரும் ஞானவேல் அண்ணாச்சியின் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே, பார்ட் டைமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் பல பேருக்கு வேலை வாங்கி தருகின்றனர். இதைப்பார்த்து இவர்களது வீட்டின் அருகில் சினிமா டான்ஸராக இருக்கும் ஹீரோயின் சுவாதிக்கு-சசிக்குமார் மீதும், பெட்ரோல் பங்கில் உடன் வேலைபார்க்கும் நிவேதாவிற்கு-நரேஷ் மீதும் காதல் கண்ணை மூடிக்கொண்டி வருகிறது. இப்படி தாங்களும் வளர்ந்து சைடில் இருப்பவர்களையும் வாழவைக்கும் சசிகுமார், நரேஷ் இருவர் மீதும் பைத்தியார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த பைத்தியங்கள்… எனும் குற்றச்சாட்டு இண்டரவெல்லுக்கு முன் இடியென வந்து விழ, அவர்களை தேடிவந்த கிராமத்து ஆசாமிகளுடன் கிளம்பினார்களா…? இல்லை, தாங்கள் பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்து, தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்களா…? என்பது போராளி படத்தின் போராட்டமான மீதிக்கதை!

சிலோன் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது, இவளுக்கு சிலோன் பரோட்டா வேண்டுமாம் என்பது உள்ளிட்ட டச்சிங் டயலாக் பேசியபடி இளங்குமரனாக வரும் சசிகுமார், முன்பாதியில் ஃபிரேம் டூ ஃபிரேம் தான் செம மூளைக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்பாதியில் உறவுகளால் ‌பைத்தியம் ஆக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே சித்த பிரமை பிடித்தவர் போன்றே தெரிவது மைனஸ்! சசிகுமாரின் முன்பாதி துருதுறுப்பும், சுறுசுறுப்பும் பின்பாதியில் இல்லாமல் இருப்பது படத்தையும் ஸ்லோவாக்கி விடுவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

குறும்பு நரேஷ், அல்லாரி நரேஷாக தெலுங்கில் செம பிரபலம் என்றால், தமிழில் குறும்பு படத்திற்குப்பின் மீண்டும் இப்பொழுது தான் வந்திருக்கிறார். சுயநிலை இழக்கும் இடங்களில் நடிப்பில் மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

சுவாதி, நிவேதா, வசுந்த்ரா மூவருமே முக்கிய பங்காற்றும் நாயகி என்றாலும், மூவரில் பின்பாதியில் ஆட்டுக்கார அலமேலு… எனும் ரீதியில் ஈட்டி, கம்பும் கையுமாக வீராவேசமாக வரும் வசுந்த்ரா பிரமாதம். கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஜெயபிரகாஷ், ஞானசம்பந்தாம், ஞானவேல், நமோ நாராயணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

சுந்தர்.சி.பாபுவின் அதிரடி இசை, எஸ்.ஆர்.கதிரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் இயக்குநர் பி.சமுத்திரகனி, போராளி படத்தில் நிறையவே போராடி இருப்பது தெரிகிறது. அதற்கான வெற்றி எவ்வளவு என்பது ரசிகர்களின் தீர்ப்பிலேயே இருக்கிறது.

போராளி – புத்திசாலி! அதிர்ஷ்டசாலியா…?!

 

மயக்கம் என்ன

“புதுப்பேட்டை” படத்திற்கு அப்புறம், நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் அண்ணன் செல்வராகவனும், கதாநாயகன் தம்பி தனுஷூம் இணைந்திருக்கும் திரைப்படம் தான் “மயக்கம் என்ன”!

கதைப்படி வெவ்வேறு வேலைகள், லட்சியங்கள் உண்டென்றாலும், 24 மணிநேரமும் ஒன்றா‌கவே இருக்கும் நண்பர்கள் கார்த்திக், சுந்தர், சங்கர், ரம்யா, பத்மினி, மாதேஷ், ரமேஷ் உள்ளிட்டவர்கள். ஆண், பெண் இருபாலரும் உண்டென்பதால் இவர்களிடையே சிலருக்குள் காதலும், சிலரிடையே வெறும் சகோதரத்துவமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பீரும், பிராந்தியுமாக தழைத்தோங்குகிறது. ஒரு கட்டத்தில் யாமினி எனும் அழகிய யுவதியை சில நாட்கள் பழகி, பின் இருவருக்கும் ஒத்துப்போனால் தன் காதலியாக அடையும் எண்ணத்தில், தங்கள் டீமுக்கு அழைத்து வருகிறார் சுந்தர். ஆரம்பத்தில் யாமினியை, அந்த டீமில் சேர்த்து கொள்ள மறுத்து, கலாய்க்கும் டீமின் ஜீனியஸ் என்றழைக்கப்படும் கார்த்திக், பின் யாமினியின் கண் அசைவுகளிலும், காதல் வலையிலும் கவிழ்கிறார். நட்பு தப்பாய் போன வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், நட்பிற்காக காதலை விட்டுக்கொடுக்கும் சுந்தர், கார்த்திக்கின் தங்கைக்கும், வாழ்க்கை கொடுக்கிறார்

கார்த்திக்கும்-யாமினியும் கல்யாணம் கட்டிக்கொண்டு இல்லறத்தில் இனிமை காண்கின்றனர். சில வருடங்கள் உருண்டோடியதும், இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் சின்னதொரு விபத்து, கார்த்திக்கின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டு வர, சிறந்த புகைப்பட கலைஞராக வர துடிக்கும் கார்த்திக், காதல் மனைவியை துன்புறுத்தும் சைக்கோவாக மாறுகிறார். கணவரின் சைக்கோ தனங்களை ‌பொறுத்துக் கொண்டு கார்த்திக்கின் மனைவி யாமினியும், சுந்தர் உள்ளிட்ட நண்பர்களும், கார்த்திக்கை உலகத்தின் நம்பர்-1 புகைப்பட கலைஞராக மாற்ற உறுதுணையாக இருப்பதே “மயக்கம் என்ன” படத்தின் மீதிக்கதை!

ஜூனியஸ் கார்த்திக்காக, தனுஷ் மெய்யாலுமே ஜீனியஸாக தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு நடித்திருப்பது படத்தின் பெரிய ப்ளஸ். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் மட்டும், தம்பி தனுஷூக்கு ஒரு லுக் வழக்கம் போலவே இப்படத்திலும் கிடைத்திருக்கிறதென்றால் மிகையல்ல! என்னதான் மனநலம் பாதிக்கப்பட்டவர், கோபக்காரர் என்றாலும், ஆத்திரத்தில் மனைவியை தள்ளிவிட்டு, அவரது கரு கலையை காரணமாகும் தனுஷ், விபரம் புரிந்ததும் வருத்தம் தெரிவிப்பதோடு நிறுத்திக்கொள்கிறார். அவ்வாறு இல்லாமல் வீட்டில் படிந்திருக்கும் இரத்த கறையை துடைக்க உதவி செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

யாமினியாக, நாயகி ரிச்சா கங்கோபாத்தியாயே நச் தேர்வு! கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன் என இந்தகாலத்திலும் வாழும் மார்டன் யுவதி! சில இடங்களில் நடிப்பில் தனுஷையே ஓரங்கட்டி விடுகிறார் பலே! பலே!! நாயகன், நாயகி தவிர சுந்தராக வரும் சுந்தர், சங்கராக வரும் மதி, ரம்யா எனும் சோனி, பத்மினியாக-பூஜா பாலு, மாதேஷாக-ரவிபிரகாஷ், ரமேஷாக-ராஜிவ் சவுத்ரி உள்ளிட்டவர்களும் பிரமாதம்!

ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்! அதிலும் ஜி.வி.பிரகாஷின் இசையில், தனுஷ் பாடியிருக்கும் “ஓட, ஓட…” பாடலும், “காதல் என் காதல்…” உள்ளிட்ட படத்தின் ஆறு பாடல்களுமே காதிற்கினிய கானங்கள்!

பாடல்கள் அனைத்தையும் எழுதியது போன்றே, படத்தையும் கவித்துமாக எழுதி, இயக்கி இருக்கிறார் செல்வராகவன்! போலித்தனம் இல்லாமல், இன்றைய சமூகத்தை அபட்டமாக படம் பிடித்து காட்டியிருக்கும் செல்வராகவன், அதை இன்னும் சற்றே, விறுவிறுப்பாக சொல்லி இருந்திருந்தார் என்றால் “மயக்கம் என்ன”! தயக்கம் இல்லாமல் “பி” மற்றும் “சி” சென்டர்களையும் கவர்ந்திருக்கும்!

மொத்தத்தில் “மயக்கம் என்ன”, “ஏ” கிளாஸ் ரசிகர்கள் “வியக்கும் படம்ணே!”

 

வித்தகன்

முன்பாதியில் போலீஸ், பின் பாதியில் தாதா… என புதுமைப்பித்தன் பார்த்திபன் வித்தியாசமும், விறுவிறுப்புமாக யோசித்திருக்கும் படம் தான் “வித்தகன்” எனும் “வித்-த-கன்” திரைப்படம்!

பார்த்திபனின் அப்பா சம்பத்ராம், ஆசை ஆசையாய் பார்த்து வந்த போலீஸ் வேலையை அம்போ என விட்டுவிட்டு வேறு வேலை, வேறு ஊர் என குடும்பத்தோட குடிபெயர காரணமாகிறார் வில்லன் மிலிந்த் சோமன். அவரை பழிவாங்க, தன் அப்பா மற்றும் குடும்பத்திற்கே தெரியாமல் அநாதை என்று சொல்லி ஐ.பி.எஸ். ஆபிஸராகும் பார்த்திபன், உத்தியோகத்தில் நேர்மையாகவும், புதுமையாகவும் செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கிறார். இவரது நற்பெயரால், கெட்டதை மட்டுமே சம்பாதித்து வரும் உயர் அதிகாரியின் கைகளில், பார்த்திபன் அநாதை அல்ல, அவருக்கு குடும்ப பின்னணி உண்டு எனும் தகவல் ஆதாரபூர்வமாக கிடைக்கிறது. அதையே காரணமாக வைத்து பார்த்திபனை போலீஸ் உத்தியோகத்தில் இருந்து தூக்குகிறார் அந்த அதிகாரி! அப்புறம்? அப்புறமென்ன…? தானும், தன் தந்தையும் போலீஸ் வேலையை விட்டு போக காரணமாக இருந்தவர்களையும், சமூகத்தில் ஒழுக்கம் கெட காரணமாக இருப்பவர்களையும் பார்த்திபன் எப்படி அழிக்கிறார் என்பது வித்தகன் படத்தின் விஸ்வரூப மீதிக்கதை!

போலீஸ் – தாதா என இரு வேறு துருவங்களில் நின்று, சமூகத்தை காக்கும் வித்தகனாக வித்தியாசமான வேடங்கள் ஏற்றிருக்கும் பார்த்திபன், மற்ற ஹீரோக்கள் மாதிரி பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களின் செவிகளை பஞ்சராக்காமல், “நீங்க துப்பு துலக்கிட்டீங்க… இங்க எவனோ துப்பிட்டு போயிருக்கான்…” என்பது உள்ளிட்ட எதிராளிகளை டேஞ்சர் ஆக்கி, டின்ஜர் போட்டு விடும் டயலாக்குகளில் ஒரு சேர கண்ணையும், கருத்தையும் கவருகிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் பார்த்திபன் படம் பார்த்த திருப்தி ஒன்று போதும் என்றாலும், முன்பாதி போலீஸ் பார்த்திபனின் கம்பீரமும், காமெடியும் ஓ.கே. பின்பாதி தாதா பார்த்திபனின் கெட்-அப் ஆங்காங்கே சாதாவாக தெரிவது மைனஸ்!

அழகு பதுமையாக பூர்ணா, பார்த்திபன் செய்யும் கொலை ‌ஒன்றை கண் எதிரே பார்த்தும்கூட அவரை காதலிக்க தொடங்குவது நம்ப முடியாத சுத்த ஹம்பக். மற்றபடி, பூர்ணாவின் புடவையில் வரையப்பட்டிருக்கும் பூக்கள் கூட, கிராபிக்ஸில் மெய்யான பூக்களாய் மலர, மலர வெளிநாட்டு லொகேஷன்களில் டூயட் பாடிய படி பார்த்திபனை காதலிப்பதெல்லாம் சூப்பர்! ஓ.கே.

கடைசிவரை பார்த்திபன் தனக்கேன் வில்லன் ஆனார்…? என்பது தெரியாமலே, பார்த்திபனால் கொல்லப்படும் இண்டர்நேஷனல் வில்லன் மிலிந்த்‌ சோமன், பார்த்திபனின் அப்பாவாக, பொறுப்பான போலீஸ்காரராக ப்ளாஷ்பேக்கில் வரும் சம்பத்ராம், மினிஸ்டர் மோகன் நடராஜன், அவரது கெட்ட மகனாக கொஞ்ச நேரம் வந்து, செத்து போகும் வின்சென்ட் அசோகன், பார்த்திபனுக்கே பின்பாதியில் டானாக வந்து பார்த்திபனாலேயே டப் பென்று சுடப்படும் ரவிசங்கர், ஒருபாடலில் மைக்கும் ‌கையுமாக தோன்றி மறையும் ராக்கி பார்த்திபன்(பார்த்திபனின் ஆண் வாரிசு…) உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்!

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில், ரா.பார்த்திபனே 6 பாடல்களையும் எழுதி இருக்கிறார். “இக்குதே கண்கள் விக்குதே…” பாடல் மட்டுமே அடிக்கடி காதில் ஒலிக்குதே… எனப்பாராட்டும்படி இருக்கிறது. ஆண்டனியின் படத்தொகுப்பும், எம்.எஸ்.பிரபு-ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ரா.பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இயக்கத்தில் “வித்தகன்” வசனத்திலும், இயக்கத்திலும் பளிச்சிட்டிருக்கிறது!

ஆக மொத்தத்தில் “வித்தகன்”, கெட்டவர்களுக்கு “எமகாதகன்!” ரசிகர்களுக்கு…?!

 

காதலன் காதலி

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ், நடத்தியிருக்கும் காதல் போராட்டம் தான் “காதலன் காதலி”.

கதைப்படி திருப்பதி என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஜெய் ஆகாஷ். அவருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நிதி சுப்பையாவிற்குமிடையே உயிருக்கு உயிரான காதல்! நிதி சுப்பையாவின் ஒரு சில நடவடிக்கைகளைப் பார்த்து அம்மணிக்கும், அவரது முதலாளிக்குமிடையில் கள்ளத்தொடர்பு என சந்தேகிக்கும் ஜெய், அதை நேரடியாக கேட்க, நிதிக்கும்-ஜெய்க்குமிடையேயான காதல் மோதலில் முடிகிறது. அதன் விளைவு தன் படிப்பை நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து தொடரும் ஜெய்க்கு காதல், கத்திரிக்காய் என்றாலே பாகற்காயாய் கசக்கிறது. கல்லூரியில் யாராவது யாரையாவது காதலித்தார் என்று தெரிந்தால் அவர்களை அடித்து பிரிக்கும் ஜெய், மீது டெய்சி போபனாவிற்கு காதல் வருகிறது. அந்த காதல் கைகூடியதா, இல்லையா…? நிதி சுப்பையா மெய்யாலுமே ஜெய்யுடனான காதலில் துரோகம் செய்தாரா..? இல்லையா…? என்பது காதலன் காதலி படத்தின் யூகிக்க முடியாத மீதிக்கதை!

கல்லூரி மாணவர், ப்ளஸ் குத்துச்சண்டை வீரர் என ‌ஹெவிரோலில் நடித்தும், இயக்கியும் இருக்கும் ஜெய் ஆகாஷூக்கு இப்படத்தில் அவரது இயக்கத்தைவிட நடிப்பு பெட்டர். இவை இரண்டையும்விட நிதி சுப்பையா, டெய்சி போபனா இருவருடனும் கனவிலும், நிஜத்திலும் அடிக்கடி போடும் டூயட்கள் பெட்டர்! டெய்சி, நிதி இருவரும் கிளாமரே கதி என ஒரேயடியாக கவர்ச்சியை நம்பி இருப்பதால் நடிப்பு மிஸ்ஸிங். சுஹானி, ராகுல்தேவ், சுகுமார் என நிறைய பேர் படத்தில் இருக்கிறார்கள். நந்தன்ராஜின் இசை, ஜாக்கிஜானின் ஒளிப்பதிவு எல்லாம் இருக்கிறது.

தன்னை சந்தேகித்து விலகும் காதலுனுக்கு, தன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என புரிய வைத்து, இறந்து தன் இருதயத்தையும் பரிசாக தரும் காதலி எனும் புதிய “தாட்”டை “நச்” சென்று படமாக்கியிருந்தால், ஜெய் ஆகாஷ், ஜெயித்திருப்பார்! ஜொலித்திருப்பார்! “காதலன் காதலி” ஜெய் ஆகாஷூக்கு “தோல்வி தராத தோழி!”

 

தம்பி வெட்டோத்தி சுந்தரம்

தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகவும், கதைக்களமாகவும் கொண்டு வெளிவந்திருக்கும் படம் தான் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்!”

தமிழகத்திலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் நிரம்பிய கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் ரவுடிகளும், தாதாக்களும் கூட அதிகமாம். அது ஏன்? அதற்கு காரணம் என்ன…? என்பதை அலசியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, வெட்டோத்தி எனும் குமரி மாவட்ட, கிராமத்தை சார்ந்த படித்த இளைஞன் சுந்தரம் எனும் கரண், தகுதி இருந்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் குடும்பசூழல் காரணமாக கடத்தலில் இறங்குகிறார். கூடவே குமரி மாவட்டத்திலேயே பெரிய கடத்தல் பார்ட்டியும், கள்ளச்சாரய வியாபாரி தாதாவுமான, சிலுவையின் மகள் லூர்து எனும் அஞ்சலியையும் காதலிக்கிறார். கரணின் கடத்தல், காதல் இரண்டும் அவரை சோதித்ததா…? இல்லை சாதிக்க செய்ததா…? என்பது வெட்டோத்தி சுந்தரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

வெட்டோத்தி சுந்தரமான கரண்-பிரமாதம். வாத்தியார் வேலைக்கு படித்துவிட்டு, போலீஸ் வேலைக்கு முயற்சித்து, இரண்டும் கைகூடாமல் கடத்தலில் இறங்கும் கரண், நண்பர் சரவணனுக்காக உயிரையும் கொடுக்க துணிவது ஓ.கே., அதே நேரம் சரவணனால், தன் கல்யாணத்தில் முடிய வேண்டிய காதல், கலாட்டாவில் முடிவதை பொறுத்துக்கொள்வதெல்லாம் ரொம்பவும் ஓவர். என்னதான் உண்மை சம்பவம் என்றாலும் கரண், ‌க்ளைமாக்ஸில் வில்லன்களால் வீழ்த்தப்பட்டு, கண்தெரியாமல் போய், கஷ்டப்பட்டு உயிரை விடுவது உருகாதோர் நெஞ்சையும் உருக வைத்துவிடும் உணர்ச்சிமிகு காட்சிகள். அதில் கரணைத்தவிர வேறு ஒரு நடிகரால் இவ்வளவு உருக்கமாக நடிக்க முடியுமா…? என்பது கேள்விக்குறியே!

துருதுரு லூர்துவாக அஞ்சலி, செம ஜாலி பேர்வழி! மரமண்டை, மரமண்டை என கரனை திட்டிக் கொண்டே தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அஞ்சலி, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். அதேநேரம், டைரக்ஷ்ன் டச்சாக அஞ்சலியின் துறுதுறுப்பும், பரபரப்புமே கரணுக்கு வினையாய் வந்து முடிவது வேதனை! வேலையில்லா திண்டாட்டம், அதனால் “சிட்டிசன்” சரவணன் சுப்பையா, குடித்துவிட்டு பண்ணும் கலாட்டா மற்றும் தற்கொலை டிராமாக்கள் உள்ளிட்டவைகளை தவிர்த்திருந்தால் இயக்குநரை இன்னும் அதிகமாக பாராட்டலாம்!

சாலை எனும் பாத்திரத்தில் சரவணனும், அவரது கூட்டாளி ஆப்பையாக வரும் சுப்புராஜூம் காமெடிக்கு, காமெடியும் செய்து நட்புக்காக உருகவும் செய்கிறார்கள். கரண்ட் கஞ்சா கருப்பு, சிலுவை ஜே.எஸ்.பாலாசிங், சண்முகராஜன், போலீஸ் வில்லன் நந்தா சரவணன் உள்ளிட்ட எல்லோருமே பாத்திரமறிந்து நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பேஷ்! பேஷ்!!

அழகிய ஆஞ்சமநாயலுவின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் மெலோடி பாடல்களும், வி.சி.வடிவுடையானின் எழுத்து, இயக்கத்தில் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தை “அண்ணன் அழகு சுந்தரமாக” ஜொலிக்க செய்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!