Archive for September, 2010

வந்தேமாதரம்

இந்தியா முழுக்க லட்சக்கணக்கான போலீஸ் ஆபிஸர்கள் இருந்தாலும் வழக்கம்போலவே தேசத்தை காக்க சிங்கிளாய் நின்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் அலப்பறை பண்ணும் சினிமாதான். அர்ஜூனுக்கு ஆறுதலாய் அவர் கூடவே இருக்கிறார் உளவுத்துறை அதிகாரி மம்முட்டியும் என்பது படம் பார்க்கும் நமக்கு ஆறுதல்!

கதைப்படி, இந்தியா முழுக்க உள்ள நதிகளை ஒன்றிணைத்து தேசியமயமாக்கி விவசாயத்தில் வெற்றி பெறும் முயற்சியின் தொடக்க விழாவிற்காக நாகர்கோயில் வரவிருக்கும் பாரத பிரதமரை தீர்த்துக் கட்ட தென்இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள் பயங்கரவாதிகள். இதை தெரிந்து கொள்கிறார் ஐபிஎஸ் ஆபீஸர் மம்முட்டி. அவர்களையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் பிடிக்க அர்ஜூன் தலைமையிலான ஸ்பெஷல் டீம் ஒன்றை உருவாக்கி தானும் அவர்களுடன் களம் இறங்குகறிார். மம்முட்டி – அர்ஜூன் இருவரது கூட்டு முயற்சி வென்றதா? இல்லை பயங்கரவாதிகள் வென்றார்களா? என்பது மீதிக்கதை!

ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூன் வழக்கம்போலவே தேசப்பற்றை முகத்தில் காட்டி தேசத்திற்கு எதிரான போராளிகளை போட்டுத் தாக்குகிறார். என்ன? வயதானதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், கருவளையங்களையும் என்னதான் மேக்கப் போட்டும் தடுக்க முடியாதது பரிதாபம்!

மிடுக்கான ஐபிஎஸ் ஆபிஸராக அர்ஜூனை சேர்த்துக் கொண்டு பணியாற்றும் மம்முட்டி, அர்ஜூனை காட்டிலும் கம்மியாகவே ஆக்ஷனில் இறங்கினாலும் நிறையவே நடித்து சபாஷ் வாங்கி விடுகிறார். அதற்காக தன் மனைவி சினேகாவையே பயங்கரவாதியிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனது மகளாக அனுப்பி வைத்து சினேகாவை பறிகொடுப்பதெல்லாம் நம்பவே முடியவில்லை.

ஒருமுறைகூட விமானத்தில் பறக்காமல் பைலட் (கெட்-அப்)டாக வரும் மம்முட்டியின் மனைவி சினேகா, மம்முட்டி – அர்ஜூனுடன் போலீஸ் ஆபிஸராக வந்துபோகும் ஜெய் ஆகாஷ், மலையாள ஜெகதீஷ், பிரதம மந்திரியாக வரும் நாசர், இரும்பு வியாபாரி ரியாஸ்கான், பயங்கரவாதிக்கு உதவி பின் ஜெயிலில் களி தின்னும் பெயிர மனிதர் ராஜ்கபூர், தற்கொலை செய்துகொள்ளும் டாக்டர் ஜெயபிரகாஷ், நாகர்கோயில் காவல் அதிகாரி ராஜன் பி.தேவ், வில்சன் தீபக் என படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும், மலையாளத்திலும் விற்பனை செய்துவிடும் நோக்கில் எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் முன்பாதியில் இருக்கும் நம்பகத்தன்மை படத்தின் பின்பாதியில் இல்லாதது தமிழிலே‌யே வந்தேமாதரம் தாக்குபிடிக்குமா? எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.

அதுவும் மம்முட்டிக்கும், அர்ஜூனுக்கும் நிஜமாகவே வயதாகி விட்டதால், அழகான இளமையான வில்லன் தீபக்கை ஸ்பெஷல் ஜெயிலுக்கு தள்ளி அவர் வந்து 20 வருடனம் ஆகி விட்டதாக ஜோடித்து, தீபக்கிற்கு ஓல்ட் கெட்-அப் போட்டு கண்றாவி ஆக்குவதெல்லாம டூ மச்!

ராஜேஷ் யாதவ், எம்.வி.பன்னீர்செல்வம் இருவரது ஒளிப்பதிவும் படத்தின் பெரும் பலம். இமானின் இசையும், அரவிந்த்.டியின் இயக்கத்தில் வந்தேமாதரம் முன்பாதி நச். பின் பாதியில் இல்லை டச்!

 

துரோகி

நட்பும் துரோகமும் கலந்து கட்டிய முழு நீள ஆக்ஷன் சப்‌ஜெக்ட்தான் துரோகி.

விஷ்ணுவும், ஸ்ரீகாந்தும் பள்ளிப்பருவ நண்பர்கள். ‌பொதுப்பிரச்னையில் தலையிடும் தங்களது பூஜா டீச்சரை வகுப்பறையிலேயே தீர்த்து ‌கட்டும் தாதாவை சின்ன வயசு ஸ்ரீ, ஸ்கெட் போட்டுக் கொடுக்க, சின்ன வயசு விஷ்ணு தீர்த்துக் கட்டுகிறார். இதை மோப்பம் பிடிக்கும் போலீஸ் சிறுவர்களை அழைத்து போய் விசாரிக்க… போலீசின் அடிக்கு பயந்து விஷ்ணுவை காட்டிக் கொடுக்கிறார் ஸ்ரீகாந்த். அப்புறம்… அப்புறமென்ன? அங்கு ஆரம்பிக்கும் அவர்களது ஈகோ மோதல் இருபெரும் தாதாக்களாக வளர்ந்த பின்பும் (அதிலும் ஒருவர் போலீஸ் தாதா) தொடர்கிறது. இறுதியில் நட்பு ‌தோற்றதா? து‌ரோகம் வென்றதா? என்பதை சொல்கிறது க்ளைமாக்ஸ் உள்ளிட்ட மீதிக்கதை!

ரவுடியிஸம் நிரம்பிய வடசென்னை‌வாசிகளான சிறுவனர்கள் கொலை செய்வதைக்கூட ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் பேச்சும், நடவடிக்கைகளும் ஏதோ சொல்லிக் கொடுத்து செய்வது மாதிரியே இருப்பது போர். பசங்க பட பாதிப்பில் இப்போது வரும் படங்களில் எல்லாம் சிறுவர்கள் எபிசோட் ஜாஸ்தியாக இருப்பது தியேட்டருக்கு வரும் இளசுகளுக்கும், பெரிசுகளுக்கும் எந்தளவிற்கு பிடிக்கும் என்பது இப்படத்தின் பெண் இயக்குனர் சுதா.கே.பிரசாத் உள்ளிட்ட இயக்குனர்களுக்கே வெளிச்சம்.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் சதா சர்வநேரமும் முகம் நிறை கடுப்புடன் திரியும் வட‌சென்னை வாலிபராக வினு்ணு நச்சென்று நடித்திருக்கிறார் என்றால், ஸ்ரீகாந்த் தாதா தியாகராஜனின் வளர்ப்பு பிள்ளையாக அவரது சொந்த மகனையே கொன்றுவிட்டு, அதை அவரிடமே சொல்லும் தைரியசாலியாக டாலடித்து டச் செய்கிறார்.

ஆக்ஷன் பட்தில் கதாநாயகிகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுதான் இந்த படத்தில் நாயகிகளாக நடித்திருக்கும் பூஜம் பஜ்வா, பூர்ணா இருவருக்குமே. ஆனாலும் அதிலும் கொஞ்சம் ஜாஸ்தி முக்கியத்துவம் பூனம் பஜ்வாவிற்கு தரப்பட்டிருக்கிறது. அம்மா – பொண்ணு என டபுள் ஆக்டிங்கில் வருவதாலோ என்னவோ பூனம், பூர்ணாவைக் காட்டிலும் மனதில் நிற்கிறார். இவர்கள் இருவரைக் காட்டிலும் கெஸ்ட் ‌கேரக்டரில் வரும் பூஜாவும் அவர் கொலையுண்ட விதமும் படம் முடிந்து நீண்ட நேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

தாதா நாராயணாவாக மம்பட்டியான் தியாகராஜன், வளர்ப்பு மகன் ஸ்ரீ வினுயத்திலும் வில்லனாக நடந்து கொள்வது எதிர்பார்த்ததுதான் என்றாலும், நீண்ட நாட்களுக்குப் பின் எதிர்பார்க்காத நடிப்பை தந்திருக்கிறார். தென்னவன், எஸ்.பி.பி. சரண், ஜெயாராவ், எஸ்.என்.லட்சுமி, மீரா கிருஷ்ணன், மாஸ்டர் கிஷோர், மாஸ்டர் வஸந்த் உள்ளிட்டோரும் இருக்கிறார்கள்.

செல்வகணேஷின் இசையில் சம சம யம யம… எனத்தொடங்கி தொடரும் குத்துப்பாடல் ஒன்று ‌போதும்! செல்வகணேஷின் இசை, அல்போன்ஸ் ராயின் ஒளிப்பதிவு ஆகியவற்றின் உதவியுடன் பெண் இயக்குனர்கள் மென்மையான கதைகளையே இயக்குவார்கள் எனும் லாஜிக்கை உடைத்திருக்கும் பெண் இயக்குனர் சுதா கே.பிரசாத், ஆண் இயக்குனர்களையே மிஞ்சும் விதமாக படத்திலும், கதையிலும் எக்கச்சக்க லாஜிக் மீறல்களையும் செய்திருப்பதுதான் கொடுமை.

 

பாஸ் (எ) பாஸ்கரன்

பலமுறை ‌பரீட்சை எழுதியும் டிகிரி பாஸ் பண்ண முடியாத ஹீரோ டூடோரியல் காலேஜ் அதிபர் ஆகி தான் விரும்பியவரை கரம் பிடிப்பதுதான் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடி‌யுமோ… அத்தனை அசத்தலாக சொல்லி காமெடியாகவும் கலக்கியிருக்கிறார்கள். சபாஷ்.

கதைப்படி, எந்த வேலையும் இல்லாமல் எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஆர்யா, ஆண்டாண்டு காலமாக தான் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை முடிக்க உடம்பு முழுக்க பிட்டுகளுடன் காலேஜூக்கு தேர்வு எழுதப் போகிறார். பஸ்ஸிலேயே இவர் பிட்ஸை பார்த்துவிடும் ட்ரைனிங் லக்சரர் நயன்தாராதான், இவரது தேர்வு எழுதும் அறைக்கு பொறுப்பாளர். விடுவாரா அம்மணி? அத்தனை பிட்களையும் பிடுங்கிக் கொண்டு ஆர்யா அடுத்த ஆண்டும் பெயிலாக காரணமாகிறார்.  இந்நிலையில் யதேச்சையாக ஆர்யாவின் அண்ணனிற்கும், நயன்தாராவின் அக்காவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கல்யாணமும் நடக்கிறது. அதுமுதல் நயன்தாரா மீது காதல் கொள்ளும் வெட்டி ஆபீஸர் ஆர்யாவின் காதல் அங்கீகரிக்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.

வேலைவெட்டி இல்லாமல் ஊதாரித்தனமாக சலூனில் சிப்பும் கையுமாக திரியும் இளைஞர்களை அழகாக தன் பாஸ் என்கிற பாஸ்கரன் பாத்திரத்தின்மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆர்யா. அவருக்கு நயன் மீது காதலும், பொறுப்பும் வந்ததும் வித்தியாசமாக வெற்றி பெற முயலுவதும் இயல்பு. சென்னை வாழ் ஆர்யாவை கும்பகோணத்து குமரனாக ஏற்றுக் கொள்வதிலும், பார்ப்பதிலும் சற்றே தயக்கம் இருந்தாலும் போகப் போக சரியாகி விடுகிறது. கொடுத்த கடனை திருப்பி வாங்க அவன் நடையா நடப்பான் என தெனாவட்டாக பேசும் ஆர்யாவாகட்டும், உடம்பு முழுக்க பிட்டுடன் பரீட்சை எழுத போவதிலாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்யா, பாஸ்கரன் பாத்திரமாகவே பொருந்தி இருக்கிறார்.

இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவிற்கு காமெடி சந்தானமும் ஒரே ஒரு நண்பனை வைத்துக் கொண்டு படாத பாடுபடுவது செம காமெடி!

நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும் பாடும் செம டாப் டக்கர். ஆனால் உடம்பைதான் எடை குறைக்கிறேன் பேர்வழி எனஎலும்பும் தோலுமாக ஆக்கி வைத்துக் கொண்டு நம் கண்களில் குளிர்ச்சிக்கு பதில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார். ஆர்யாவின் அண்ணன் கால்நடை மருத்துவராக, கல்யாணம் பற்றி பேசினா‌லே கடுப்பாகும் கேரக்டரில் வரும் சுப்பு பஞ்சுவும், அவரது ஜோடி விஜயலட்சுமியும் கூட சூப்பர் பர்பார்மன்ஸ்.

யுவனின் இதமான இசை ஷக்தி சரவணனின் இனிமையான ஒளிப்பதிவு இவற்றின் உதவியுடன் காதலையும், காமெடியையும் கலந்து காக்டெயில் பார்ட்டி கொடுத்து கலக்கியிருக்கிறார் எம்.எஸ்.எஸ். இயக்குனர் ராஜேஷ் எம்.

 

பலே பாண்டியா

உலகத்தில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? எனக் கேட்கும் அளவிற்கு சந்தேகத்தை கிளப்பும் கதை! ஆனாலும் அதை கலக்கலாகவும், காமெடியாகவும் படமாக்கி பலே பலே சொல்ல வைத்துவிடுகிறது பலே பாண்டியா டீம்!

கதைப்படி, பாண்டியன் பாத்திரத்தில் நாயகராக நடித்திருக்கும் விஷ்ணு., உப்பு விற்க போனால் மழை பெய்கிறது… மாவு விற்க போனால் காற்றடிக்கிறது… என புலம்புபவர்களை எல்லாம் காட்டிலும் பேட், பேட்., பேட் லக்கி கேரக்டர். குழந்தையில் ‌தொடங்கி குமரன் ஆனது வரை தொடரும் இதுமாதிரி பேட்லக் சமாச்சாரங்களால் மனம் வெறுத்துப்போகும் பாண்டியனின் தற்கொலை முயற்சிகளும், அடுத்தடுத்து தவிடுபொடி ஆவதால் மேலும் வெறுத்துப்போகிறார் மனுஷர். பாவம்!

கடைசியாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை புரட்டிக் கொண்டு தன்னை தீர்த்து கட்டிவிட சொல்லி தாதா ஏ.கே.பி.யிடம் போகிறார். அவரோ., இவரது கதையை கேட்டு படம் பார்ப்பவர்களோடு சேர்ந்து (?) கொண்டு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு கொலை செய்ய தனது ரேட் 5 லட்சம். வெறும் பத்தாயிரத்திற்கெல்லாம் உன்னை கொல்ல முடியாது. வேண்டுமானால் சில நாட்கள் கூட இரு. யோசித்து சொல்கிறேன்… என ஜகா வாங்குவதுடன், தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி மந்திரி ஒருவரது மகளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால் பாண்டியனோ… விடாமல் நச்சரிக்கவே… பொறுக்க முடியாத ஏ.கே.பி., 10ம்தேதி சிட்டியில் நடக்க இருக்கும் ஒரு காவல்துறை உயர் அதிகாரிகள் மீட்டிங்கை சீர்குலைக்கும் விதமாக நீ மனித வெகுண்டாக போய் தற்கொலை செய்து கொள். அதுவரை இதில் இருக்கும் 25 லட்சத்தை உன் கூலியாக வைத்து செலவு செய்து கொள் என ஒரு டெபிட் கார்டை கொடுத்து இந்த கார்டும் 10ம்தேதி வேலை செய்யாது தீர்ந்து போகும், நீயும் தீர்ந்து போவாய் என்கிறார்.

அதுநாள்வரை குடும்பத்தினர் உள்ளிட்ட எல்லோருக்கும் அதிர்ஷ்டக் கட்டையாக இருக்கும் பாண்டியன், ரூ.25 லட்சம் கிடைத்ததும் தன் மீது விழுந்து படிந்த அவப்பெயரை துடைத்துக் கொள்ளும் முகமாக களம் இறங்குகிறார். இந்நிலையில் ஏகேபி தீர்த்துக் கட்ட திட்டமிடும் மினிஸ்டர் மகளுடன் பாண்டியனுக்கு எதிர்பாராமல் காதல் வேறு ஏற்படுகிறது. பாண்டியனின் காதல் கை கூடியதா? 25 லட்சம் தீர்ந்ததும் மனித வெடிகுண்டாக மாறி அவனுடைய உடல் சிதறியதா? உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது பலே பாண்டியா படத்தின் மீதிக்கதை!

பலே பாண்டியனாக வெண்ணிலா கபடிக்குழு விஷ்ணு. அதிர்ஷ்டக்கட்டையாக குடும்பத்தாராலேயே ஒதுக்கி வைக்கப்படும்போதும் சரி… காசு, காதல் எல்லாம் கிடைத்த பின்பும் சரி… இருவேறு பரிணாமங்களில் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அமைதியான முகத்தை வைத்துக் கொண்டு விஷ்ணு சந்திக்கும் அவமானங்களும், அதிர்ஷ்டம் இல்லாமையையும் ஜோசியம், ராசி, நட்சத்திரம், அதிர்ஷ்டம் இவற்றில் எல்லாம்  நம்பிக்கை இல்லாதவர்களையும்கூட உலுக்கி எடுத்து விடும்.

பொய் சொல்லப்போறோம், கோவா படங்களில் நடித்த பியாதான் கதாநாயகி. சைனா ‌பொம்மை மாதிரி இருந்தாலும் அம்மணி நடிப்பில் பொளந்து கட்டுகிறார். ஏகேபியாக வரும் புதியவர் மகேந்திரன், நாடி ஜோதிடர் பாண்டு, கச்சிதம் ஜிப்ரான், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், டாக்டர் ஷர்மிளா, ஆர்த்தி என படத்தில் பங்குபெற்றுள்ள மற்ற நட்சத்திரங்களும் தங்கள் பங்கை சரியாக செய்து இருக்கின்றனர். காமெடியை ஹீரோ உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் செய்து சிரிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கூட அந்த விவேக(மில்லாத) காமெடி நடிகர் செய்து சிரிப்பை வரவழைக்காதது கொடுமை.

தேவன் ஏகாம்பரத்தின் இசையும், சவுந்தர்ராஜன், ஆர்.எஸ்.குருதேவ் இருவரது ஒளிப்பதிவும், சித்தார்த் சந்திரசேகரின் எழுத்தும் இயக்கமும் பலே பாண்டியாவை ஏ க்ளாஸ் படமாக்கி இருக்கின்றன. படமும் ஏ சென்டர் ரசிகர்களுக்கு புரியும் அளவு பி மற்றும் சி சென்டர் ரசிகர்களுக்கு புரியுமா? பிடிக்குமா? என்பது கேள்விக்குறியே!

 

சிந்து சமவெளி

தகாத உறவுகளை தவறான உறவு என தம்பட்டம் அடித்து சொல்லும் படம்தான் சிந்து சமவெளி! இந்த தம்பட்டத்திற்கு நிறைய தப்பாட்டங்களை காட்சிகளாக்கி கல்லா கட்ட முயற்சித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். ஆனாதல் அதுவே பெண்களுடன் படம் பார்க்க வரும் ஆண்களுக்கும், படம் பார்க்க வரும் குடும்ப பெண்களுக்கும் தர்மசங்கடம்!

கதைப்படி, மிலிட்டரிக்காரரான அப்பாவுக்கும், டீச்சர் அம்மாவுக்கும் பிறந்த மகன்தான் ஹீரோ ஹரீஸ் கல்யாண். அவர் வளர்ந்து பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது பார்டரில் நடந்த ஒரு சண்டையில் குண்டடி படுகிறார் அப்பா. இனி, ராணுவத்தில் செயல்பட முடியாது எனும் நிலையில் வி.ஆர்.எஸ். வாங்கிக் கொண்டு மனைவி மகனுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று மிலிட்டரிக்காரர் ஊருக்கு வருகிறார. வந்த சில நாட்களிலேயே டீச்சர் மனைவி பாம்பு கடித்து இறந்து போக., மனைவியை இழந்த கணவரும், அம்மாவை இழந்த மகனும், ஆக்கிப்போட ஆளில்லாமல் அல்லாடுகறிார்கள். அப்புறம்? அப்புறமென்ன…? அதையே காசாக்கி மகனுடன் ப்ளஸ்-டூ படித்து முடிக்கும் மாணவியை மருமகளாக்கிக் கொள்கிறார் மிலிட்டரி. இதற்கு அப்புறம்தான் கதையே!

அதாகப்பட்டது.., பள்ளி இறுதி ஆண்டில் ஸ்கூல் பர்ஸ்ட் வரும் மகனை அவனது அம்மா மாதிரி டீச்சர் ஆக்க வேண்டும் என்ற லட்சியத்திற்காக டீச்சர் டிரைனிங் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் மிலிட்டரி, மருமகளை மருமகளாக நடத்தாமல் மனைவி ஆக்கிக் கொள்வதுதான் சிந்து சமவெளி படத்தின் திடுக்கிடும் மீதிக்கதை!

அன்பழகனாக புதுமுகம் ஹரீஸ் கல்யாண் நல்ல நடிப்பின் மூலம் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக திகழ்கிறார். தமிழ் சினிமாவிற்கு  நடிக்கத் தெரிந்த அழகான இளம் ஹீரோ ரெடி! சுந்தரியாக அமலாபால் அலைஸ் அமலா செம கச்சிதம். முத‌ல் படமான வீரசேகரன் படத்தில் நடித்ததை விட எக்கச்சக்க ஸ்கோர் செய்திருக்கிறார். காதலித்து கல்யாணம் செய்து கொண்ட அன்பழகனுக்கு எதிர்பாரதவிதமாக இவர் செய்யும் துரோகம், அனகா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தாமல் அனுதாபத்தை ஏற்படுத்துவதுதான் படத்தின் பெரும் பலம்.

மிலிட்டரி மாமனாராக வரும் வீராச்சாமி எனும் கஜினி மகன் மீது பாசம் காட்டும்போதும் சரி, மனைவி மீது காதல் கொள்ளும்போதும், மருமகள் மீது காமம் கொள்ளும்போதும் வெவ்வேறுவித பரிமாணங்களில் நடித்து தனக்கும் பேசத்தக்க எதிர்காலம் இருக்கிறது என்பதை தன் படிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆனால் 17 ஆண்டுகள் பார்டரில் போராடி தேசத்தை காப்பவர், மகன் விட்டுச்சென்ற தேகத்தை சூறையாடுவது என்னதான் சந்தர்ப்ப சூழ்நிலை என்றாலும் கொடூரம். கஞ்சா கருப்பு சர்ச் பாதராக சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரிக்கறார்.

ஆணுறையையும், அட்வைசையும் படகில் முதலிரவு கொண்டாட போகும் நண்பனுக்கு கொடுத்து அனுப்பும் பறவை முருகேஷனில் தொடங்கி, வீராசாமிக்கு அட்வைஸ் பண்ணும் மீசை பெரியவர் வரை சகலரும் பாத்திரம் அறிந்து நடித்திருப்பது படத்தின் பெரும்பலம். பொம்பளைங்களை பத்து தடவை பார்த்தாலே அழகா இல்லாத பொம்பளைங்களும் அழகா தெரிவாங்க. அதுதான் பொம்பளைங்களோட மந்திர சக்தி. இதுல இருந்து விடுபட முடியாது. மருமகள்கிட்ட இருந்து விலகலன்னா வீட்டுல பிணம் விழும் என்று அந்த பெரியவர் சொல்வது க்ளைமாக்ஸில் பலித்துபேவது நெஞ்சை உருக்குகிறது.

உத்பல்வி நாயனாரின் ஒளிப்பதிவில் கடலும் மலையும் யானைகளும் படகுகளும் கண்களுக்கு குளிர்ச்சி என்பது ப்ளஸ். சுந்தர்சி பாபுவின் இசையில் யார் இங்கு நல்லவர்கள் பாடல் தவிர வேறு எதுவும் காதுகளுக்கு குளிர்ச்சி இல்லை என்பது மைனஸ்.

கொச்சையான கதை என்றாலும் இச்சையான காட்சிகளை மட்டுமே நிரப்பி காசு பார்க்க நினைக்காமல், சமூகத்திற்கு சமூகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செக்ஸ் கொடூரங்களை வைத்தே பாடம் கற்பிக்க முயற்சிக்கும் இயக்குனர் சாமிக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். உயிர், மிருகம் படங்களை அடுத்து சமூக பிரக்ஞையுடன் சாமி இயக்கியிருக்கும் சிந்த சமவெளியும் நாகரீகமே!