Archive for August, 2010

வம்சம்

தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த ஜாதி? வியாதி எல்லாம் பாண்டி? கதைப்படி மது,சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும் அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.

எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல. கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு. வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம். ஆனாலும் பெண்களை அடிக்கமாட்டாங்க நம்ம வம்சத்தில் என பெருமையாக சொல்லும் அந்த வம்சத்தில் சூதாடியாகவும், ஊதாரியாகவும் சுற்றி திரியும் கிஷோர் குமாரை அருள்நிதியின் அம்மா பெருந்தன்மையாக பேசுவது நெருடலாக இருக்கிறது. மதுவும் சூதுவும் கூட ஒரு வம்சத்தில் பெருமை சேர்க்கும் பட்டியலில் எப்போது சேர்ந்தது? எப்படி? எவ்வாறு சேர்ந்தது..? என்பது புரியாத புதிர்!

படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது… ஒரே ஜாதியின் பெருமை பேசுவதுஎன நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும்அம்சமாக இருந்திருக்கும். தன் மகனுக்காக மோகனா மூவிஸ் மு.க. தமிழரசு., மக்கள் தொடர்பு நிகிலில் தொடங்கி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை தாஜ்நூர், எழுத்து இயக்கம் பாண்டிராஜ் என எல்லோரையும் பார்த்து பார்த்து பொறுக்கி எடுத்திருக்கிறார். அதேபோல் ஒரே ஜாதியை உயர்த்தி பிடிக்கும் கதையை தவிர்த்து ஜனரஞ்சகமான கதையையும் தேர்ந்தெடுத்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும். ஆகமொத்தம் அது இல்லாதபட்சம் வம்சம் அம்சமும் அல்ல! துவம்சமும் அல்ல!

 

காதல் சொல்ல வந்தேன்

வழக்கமான கல்லூரி காதல் கதைதான். ஆனால் அதை சற்றே வித்தியாசப்படுத்தி சீனியர் மாணவி மீது ஜூனியர் மாணவருக்கு ஏற்படும் காதலாக முடிவில் நிறைவேறாத சோகக்காதலாக சூடாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, தேவதையை கண்டேன் படங்களின் இயக்குநர் இயக்கியுள்ள ஒரே காதல் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கதைப்படி பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பிரபு எனும் பாலாஜியும், சபேஷ் கார்த்திக்கும். ஜாலி பேர்வழிகளான இவர்களை சீனியர் மாணவிகள் சிலர் ராக்கிங் செய்ய அதில் ஒருத்தியான சந்தியா எனும் மேக்னா சுந்தரையே காதலிக்கத் தொடங்குகிறார் பிரபு. ஒல்லி பிரபு குண்டு சபேஷ் கார்த்திக் இவர்களது சுட்டித்தனத்தால் கவரப்பட்ட சந்தியாவோ இவர்களை தம்பியாக கருதி பாசத்தை பொழிய பிரபு பாலாஜியோ அது தெரியாமல் சந்தியாவை உயிருக்கு உயிராய் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தியாவிற்கு பாலாஜியின் காதல் தெரியவர கடுப்பில் அவரை விட்டு ஒதுங்கிறார். ஆனாலும் அவரை தொடர்ந்து காதலிக்கும் பாலாஜியின் காதல் நிறைவேறியதா இல்லையா? என்பது யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கி இருக்கும் நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸாகி இருக்கிறது.
பிரபுவாக பாலாஜி, சந்தியாவாக மேக்னா சுந்தர் இருவரும் பாடத்திற்கேற்ற தேர்வு. இண்டெர்வெல்லுக்கு முன் அக்கானு கூப்பிடு.. என மேக்னா சுந்தர் கூறும் இடத்தில் பிரபு, மேக்னா இருவரது நடிப்பும் சபாஷ் சொல்லும் அளவு பிரமாதம். இயற்கை உபாதையின் சப்தத்தை செயற்கை மிஷின் ஒன்றின் மூலம் தன் குண்டு உடம்பின் மூலம் உண்டாக்கும் சபேஷ் கார்த்திக் செம காமெடி. சின்ன சின்ன காட்சிகளில் கூட டைரக்டர் டச் எனப்படும் தன் தனித்தன்மையை நிருபித்து இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் ஜி.பூபதி பாண்டியன். ஆனால் கிளைமாக்ஸில் காதலர்களை சேரவிடாது உருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாயகரை நாயகியின் கண் எதிரே அவர்கள் தினமும் பயணிக்கும் பேருந்து சக்கரத்திற்கே பலியாக்குவது நம்பும் படியாக இல்லை. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து பாடல்களும் , ராஜாவின் ஒளிப்பதிவும், பிரவீன் – ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் பெரும்பலம். ஆகமொத்தத்தில் தூய்மையான நல்ல காதலை சொல்லவந்துள்ள படம் காதல் சொல்ல வந்தேன்.

 

தி எக்ஸ்பென்டபிள்ஸ்

ராம்போ படத்தில் உலகப்புகழ் பெற்ற சில்வெஸ்டர் ஸ்டால்லோன், அதில் தனி ஒருவராக நின்று எதிரிகளை நாசம் பண்ணுவார். இந்த படத்தில் பார்முலாவை மாற்றி ஒரு சிறு குழுவினரோடு செல்கிறார். படம் முழுவதும் துப்பாக்கிச் சண்டை, ரத்தம், ஆக்ஷன். அவர் குழுவில் இடம்பெறும் ஜேசன் ஸ்டாதெம், ஜெட்லீ போன்ற நடிகர்கள் பிரபல ஆக்ஷன் ஹீரோக்கள். உலகம் முழுவதும் பாப்புலர். இவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது படத்திற்கு முக்கியமான ப்ளஸ் பாயிண்ட். திரைக்கதை அமைப்பு, நடிப்பு, இயக்கம் என்று மூன்று பொறுப்புகளையும் சிறப்பாக செய்திருக்கிறார் சில்வெஸ்‌டர். அறுபது ப்ளஸ் வயது என்பதால் ஸ்டால்லோன் சற்று தளர்ந்து காணப்படுகிறார்.

தென்அமெரிக்காவில் ஒரு கற்பனை நாடு விலெகு. அந்த நாட்டை தன் பிடியில் வைத்திருக்கும் முன்னாள் அமெரிக்க உளவாளி (முன்னாள்சிஐஏ ஏஜன்ட்) மற்றும் கூட்டாளிகளிடம் இருந்து சில்வெஸ்டர் ஸ்டால்லோன் எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. பீச்சுவா போன்ற சிறு கத்திரை கண் இமைக்கும் நேரத்தில் எதிரி மீது குறிபார்த்து வீசி, சத்தமின்றி கொல்லும் ஜேசன் ஸ்‌டேதம் நம்மை வியக்க வைக்கிறார். அவரும், ஸ்டால்லோனும் சிறு விமானத்தில் குறைந்த உயரத்தில் பறந்து சண்டைபோட்டு, பிறகு விமானத்தில் இருந்து பெட்ரோல் சிதறி விட்டு, அதில் சுட்டு கண் இமைக்கும் நேரத்தில் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் தீயில் நிறைய ராணுவவீரர்கள், அவர்களின் ஆயுதங்கள், வண்டிகளை துவம்சம் செய்வது நல்ல உத்தி. ஒரு நடிகை இந்த அளவுக்கு டார்ச்சருக்கு உள்ளாகியிருப்பாளா? என்ற அளவு கீஷெல் சிரமங்களை தாங்குகிறாள். துணிச்சலாக இருக்கிறது அவரது பாத்திர அமைப்பு.

பெரிய வட்டமான குண்டுகள் இருக்கும் மேகஸின் கொண்ட மெகா சைஸ் இயந்திர துப்பாக்கியை வைத்துக் கொண்டு, ஸ்டால்லோனின் உதவியாளர், ஒவ்வொரு முறை சுடும் போதும் தபுதட்டென்று தியேட்டரே அதிர்கிறது. சர்வாதிகாரியின் படையினரிடம் ஸ்டால்லோன் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும்போது, சீன நடிகர் ஜெட் லீ தனது வேகமான பாணியில் எதிரிகளை தாக்கி ஸ்டால்லோனுக்கு சப்போர்ட் பண்ணுகிறார். தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மிகப் பிரபலமான ஸ்டார்களாக இருந்தாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களாக மாறி, ஈகோ சிறிதுமின்றி பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மயிர் கூச்செரியும் நிறைய அதிரடி சண்டைக் காட்சிகளுக்கும் நல்ல ஸ்கோப் வாய்ப்பு இருக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார் ஸ்டால்லோன். நிறைய ரிஸ்க் எடுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்திருக்கும் ஸ்டார்கள், அவர்களை திறம்பட ஒருங்கிணைத்து, இயக்கிய ஸ்டண்ட் டைரக்டர் ஆகியோர், ஆக்ஷன் விரும்பும் ரசிகர்களின் பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார்கள்.

 

பாணா

மூன்றாம் பிறை, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து அளித்த பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி மூவிஸ் டி.ஜி.தியாகராஜனின் லேட்டஸ்ட் தயாரிப்பு,”பாணா காத்தாடி”. நடிகர் முரளியின் மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் முதல் படம் இது. முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிப்பது போல் அதர்வா, பத்ரி வெங்கடேஷ் இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு தொய்வு இல்லாமல், விறுவிறுப்பாக செல்கிறது படம்.

சென்னையில் ஒரு குடிசை மாற்றுவாரிய குடியிப்பை கதையின் தளமாக அமைத்திருப்பதே வித்தியாசமான முயற்சி. ப்ளஸ் டூ மாணவரான அதர்வாவும், அவரது நண்பர்களும் காத்தாடி விடுவதையே உயிர் மூச்சாக நினைக்கிறார்கள். அறுந்து போன காத்தாடியை அதர்வாவும், நண்பர்களும் துரத்தும் போது, ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் பணக்கார மாணவியான சமந்தா மீது அதர்வா மோதுகிறான். சமந்தா கல்லூரி ப்ராஜெக்ட் உள்ளடங்கிய பென்-டிரைவ், அதர்வாவிடம் சென்று விடுகிறது. அதை தேடும் சமந்தா, சண்டையில் ஆரம்பித்து பின்பு நல்ல சிநேகிதியாகிறாள். தன் காதலை அவளிடம் அதர்வா சொல்லும் போது எதிர்பாராத நிகழ்ச்சியால் கோபமடையும் சமந்தா அவனை வெறுக்கிறாள். அதே பகுதியில் வசிக்கும் லோக்கல் தாதா பிரசன்னா, முன்னாள் எம்.எல்.ஏ.,வை கொல்வதை, அதர்வா நேரில் பார்க்க நேரிடுகிறது. அதைத் தொடர்ந்து, பல பிரச்னைகள், போலீஸ் தேடல் என எதிர்பாராத கிளைமாக்சுடன் படம் முடிகிறது.

இதுதான் முதல் படம் என்றாலும் அதர்வா, இயல்பாக, யூத் புல்லாக நடித்திருக்கிறார். பசங்களுடன் கலாய்க்கம் போதம் சரி, சமந்தாவுடன் பழகும் போதம் சரி முழுமையான ஓ.கே. போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படும் போது, தாயுடன் பாசமான காட்சிகளிலும் சரி, மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் சிம்புவை நினைவுபடுத்துகிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாசமிக்க தாயாக வரும் மெளனிகாவிற்கு ஒரு சபாஷ் போடலாம்.கருணாசின் காமெடி படத்திற்கு நிச்சயம் ஒரு பிளஸ் பாயிண்ட். தந்தை டி.பி.கஜேந்திரன் தன் சட்டை பையில் வைக்கம் நூறு ரூபாய் நோட்டுக்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று கருணாஸ் பல தடவை முயல்வதும், ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதும், அதற்கு தந்தை தரும் விளக்கமும் புதுமையான நகைச்சுவை. படத்தின் முக்கிய திருப்பமும் கருணாஸால் ஏற்படுகிறது.

ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள் என்று கதையில் வருவதால் டைரக்டர், சமந்தாவின் ஆடையில் அதிக அக்கரை செலுத்தியிருக்கிறார் போலும். கிளாமரான லேட்டஸ்ட் டிசைன்களில் உடைகள் அணிந்து வரும் சமந்தாவின் நடிப்பு கச்சிதம்.பல புதுமைகளை டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தில் செய்திருக்கிறார்.நண்பர்கள் மற்றும் தாய் சமந்தாவின் காதலைஆதரித்து பிரம்மாண்டமான தியேட்டரின் வெள்ளித்திரையில் தோன்றி பேசுவது, தமிழ் சினிமாவில் புதுமை. குஜராத், ஆமதாபாத் நகரின் நூற்றுக் கணக்கான வீடுகளிலிருந்து பறக்க விடப்படும் ஆயிரக்கணக்கான காத்தாடிகள் வானில் நிரம்பி பறக்கும் காட்சிகள் புதுமை.

படத்தில் ஒரு காட்சியில் நடிகர் முரளி தோன்றுகிறார். ” காதல் வந்தால், இதயத்திலே வைச்சுக்காம, தைரியமாக சொல்லுங்க” என்று அதர்வாவிற்கு அட்வைஸ் கொடுப்பார். நீங்க என் பண்றீங்க? என்று அதர்வாவின் நண்பர் கேட்க, முரளி எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கிறேன் என்பார். பதிலுக்கு அந்த நண்பர், எவ்வளவு வருஷமாடா இவர் காலேஷிலேயே படிச்சுக்கிட்டே இருப்பாரு? என்பார். நல்ல நக்கல்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து நல்ல பாடல்கள். “குப்பத்து ராஜாக்கள்” பாட்டு ஹிட் ஆகலாம். குஜராத்தில் வரும் காட்சிகளில் மாறுபட்ட பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்கள்,பல இடங்களில் நச் சென்று இருக்கின்றன. “அழுடா, நல்லவன் தான் அழுவான்” என்று அதர்வாவின் அம்மா கூறுவார். ரிச்சர்ட் நாதன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதர்வா-பத்ரி வெங்கடேஷ் காம்பினேஷனில் பாணா காத்தாடி உயரத்தில் பறக்கும்.பத்ரி வெங்கடேஷ் திரைப்படக் கல்லூரியில் சில ஆண்டுகள் லெக்சரராக பணி புரிந்திருக்கிறார். எந்த டைரக்டரிடமும் பயிற்சி பெறாமல் முதல் படத்தை இயக்கியிருக்கிறார், பாராட்டுக்கள்.

 

தம்பி அர்ஜூனா

மகாபாரதத்தில் தர்மனுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவன் அர்ஜூனன். இப்படத்திலோ அர்ஜூனன் எனும் அன்பு தம்பிக்காக உயிரை கொடுக்கிறான் அண்ணன் தர்மன். கதைப்படி, பெரோஸ்கானும் ரமணாவும் அண்ணன் தம்பிகள். சின்ன வயதிலேயே அனாதைகளாகும் இருவரும் தாதா ஒருவரிடம் அடைக்கலமாகின்றனர். அந்த தாதாவிடம் தொழில் கற்றுக் கொள்ளும் அண்ணன் பெரோஸ்கான் (தர்மன்), தம்பி அர்ஜூனன்(ரமணா) அந்த தொழிலுக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவரை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிறார். ஏரோ நாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து பைலட் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் இருக்கம் ரமணா, அதற்காக தன் காதலைக்கூட துறக்கிறார். ஆனால் எதிர்பாராமல் அண்ணனின் விருப்பத்திற்கு மாறாக ரமணா இத்தொழிலுக்கு வர வேண்டிய சூழல். அவர் வந்தாரா? வில்லன்களை வென்றாரா? கதாநாயகியின் கரம் பிடித்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்க முயற்சிக்கிறது தம்பி அர்ஜூனா படத்தின் மீதிக்கதை.

தம்பி அர்ஜூனாவாக நடிகர் ரமணா முந்தைய படங்களைக் காட்டிலும் பிரமாதமாகக் நடித்திருக்கிறார். ரவுடியின் தம்பியாக இருந்து கொண்டு போலீஸ் கமிஷ்னரின் மகளையே காதலிப்பதும், கடத்தப்படும் காதலியை ரமணாவால்தான் காப்பாற்ற முடியும் என கமிஷ்னரே நம்புவதும், அந்திராவில் உள்ள ஆதிவாசிகள் பகுதிகளுக்குள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நாயகி ஆஷிமாவை ஒற்றை ஆளாகப் போய் ரமணா மீட்டு வருவதும் நம்பும் படியாக இல்லாதது பலவீனம்!!

அர்ஜூனன் ரமணாவிற்காக அண்ணன் தர்மாவாக வரும் பெரோஸ்கான் உயிரைவிடும் க்ளைமாக்ஸ் உருக்கம். வாங்கு தோங்காக வளர்ந்திருக்கும் பெரோஸ்கான் தர்மன் பாத்திரத்திற்கு சாலப் பொருத்தம். ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகளுக்கு என்ன வேலையோ அதே அளவு வேலைதான் இதிலும் அஷிமாவிற்கு. ஆனால் ரமணாவை காதலிக்கும் அந்தம்மா ஏன் உள்துறை மந்திரியின் மகனாக வரும் நனிபண்டாரத்துடன் ரெஸ்டாரண்ட் ரெஸ்டாரண்டாக திரிகிறார் என்பது புரியாத புதிர்.கமிஷ்னர் சுமன், வில்லன் நான் கடவுள் ராஜேந்திரன், பாலாசிங் அளவு முதல்வராக வரும் அருண்பாண்டியன், ரேகா, யுவராணி, சிங்கமுத்து ஆகியோர் எடுபடாதது பலவீனம்.

தினாவின் இசையும், மாதவராஜ் தத்தாரின் ஒளிப்பதிவும் புதியவர் விஜய் ஆர்.ஆனந்தின் எழுத்து இயக்கத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஆனால், இயக்குநரின் எழுத்து அளவிற்கு இயக்கம் இல்லாதது பலவீனம். ஆனாலும் தம்பி அர்ஜூனாவை அக்ஷன் பிரியர்கள் நம்பி பார்க்கலாம்! ஆக மொத்தத்தில், தம்பி அர்ஜூனா…’நம்பி போகலாம்னா…….’ (ஆக்ஷன் ரசிகர்கள் மட்டும்)