விருதகிரி
Posted in ViruthaGiri Movie Review, latest tamil movie, tamil film review on 12/14/2010 05:42 am by admin
நடிகர் விஜயகாந்த்துக்கு அரசியலில் அடியெடுத்து வைத்த பின்பு அதிரடியான ஒரு திரைப்படம் தேவைப்பட்டிருக்கிறது! அதற்காக இயக்குனர் அவதாரமும் எடுத்து, லாஜிக் பற்றியும் கவலைப்படாமல், மேஜிக் என்றும் கூறாமல் இந்த விருதகிரி திரைப்படத்தை தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக்கி இருக்கிறார் கேப்டன்!
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு அயல்நாட்டில் ஆரம்பமாகிறது கதை! சர்வதேச அளவில் நடைபெறும் போலீஸ் துறையின் மீட்டிங் ஒன்றிற்காக அங்கு வந்திருக்கும் தமிழக போலீஸ் அதிகாரி விருதகிரி விஜயகாந்த், இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் தீவிரவாதிகள் சிலரை ஒற்றை ஆளாக (கூட வரும் அந்த ஊர் போலீஸ்காரர்களை தூர நிறுத்தி விட்டு) துரத்திச் சென்று துவம்சம் செய்து, உலகின் நம்பர் ஒன் போலீஸான ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு பாடம் நடத்தி விட்டு, மாலை மரியாதையுடன் ஊர் திரும்புகிறார். அதன் பின்னர் உட்காரக் கூட நேரமில்லாமல் அரவாணிகள் பலரும் காணாமல் போவது குறித்த புகார் அவர் வசம் வருகிறது. உடனடியாக களத்தில் இறங்கும் கேப்டன், உப்பு வியாபாரி சண்முகராஜனின் மீது சந்தேகம் கொண்டு தன் உதவியாளரான கொமெடி சாம்ஸை திருநங்கை வேடத்தில் சண்முகராஜனின் ஏரியாவுக்கு அனுப்பி பாலோ பண்ணுகிறார். அதில் போலீஸ் மன்சூர் அலிகான் உதவியுடன், விருமாண்டி ஜெயிலர் சண்முகநாதன்தான் அரவாணிகளை கடத்தி, கொன்று அவர்களது உடல் உறுப்புகளை
அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார் என்பதை கண்டுபிடித்து, அவரையும் அவரது கூட்டாளிகளையும் கூண்டோடு தீர்த்துக்கட்டி திருநங்கைகளின் தியாகராஜர் ஆகிறார் கேப்டன். அதுவரை தடம் மாறாமல் சரியான ரூட்டில் போய்க் கொண்டிருந்த விருதகிரியும், அவர் கிரிவலம் வந்த பாதையும் கதையும் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களை கடத்துவது, அல்பேனிய சமூக விரோதிகள் என்றும், அந்த கும்பலின் தலைவனுக்கு சென்னையில் இருந்தபடியே விஜயகாந்த் எச்சரிக்கை விடுப்பதுடன், அந்த கூட்டத்தை பிடிக்க ஆஸ்திரேலியா கிளம்பியதும் கரடு முரடாகி விடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு படிக்க போகும் தன் வளர்ப்பு மகள் ப்ரியாவை சமூக விரோதிகள் கடத்தியதும், 48 மணி நேரத்தில் அவரை மீட்க இந்திய வெளியுறவுத்துறை ஆஸ்திரேலிய காவல்துறை என எதன் உதவியும் இல்லாமல் ஆஸ்திரேலியா போகும் கேப்டன், அங்கு சமூக விரோதிகளுக்கும், அவர்களுக்கு உதவும் அதிகார வர்க்கத்திற்கும் எதிராக விடும் சவால்களும், பஞ்ச் டயலாக்களும் தமிழக ஆளும் கட்சியினரையும், அரசியல்வாதிகளையும் தாக்குவது காமெடி! படத்திற்கு சென்சார் பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் விஜயகாந்த் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இந்தியாவில் உள்ள தீவிரவாதிகளை எல்லாம் பிடித்து முடித்து விட்ட கேப்டன், இதற்காகதான் ஐரோப்பிய தீவிரவாதிகளையும், ஆஸ்திரேலிய சமூக விரோதிகளையும் குறி வைத்து, சர்வதேச போலீசாக பதவு உயர்வு பெற்றிருக்கிறார் என்பது புரியாமல் இல்லை! அதேநேரம் உப்பு வியாபாரி சண்முகராஜனை எதிர்க்கும் போதும், பிடிக்கும் போதும் உள்ளூர் அரசியல்வாதிகளை நேரடியாகவே தன் வாயில் போட்டு மெல்லும் கேப்டன், மன்சூர் அலிகான், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் மூலம் அதிகாரியாக இருக்கும்போதே இத்தனை செய்கிறீர்களே? அந்த அதிகாரத்தையே வழங்கும் அரசாங்கம் உங்கள் வசம் வந்தால் நாடே மாறிப் போகும் என அடிக்கடி பேச விடுவதும் ஓவர்.
பொட்டு வைத்து வாழ்பவர்களையும் தெரியும், பொட்டுகட்டி வாழ்ந்தவர்களையும் தெரியும் என விஜயகாந்தே பேசி நடித்திருப்பதும் ரொம்பவே ஓவர்! சமீபமாக டாக்டர் விஜயகாந்த் ஆகிவிட்டதாலோ என்னவோ, பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றி மருந்து எல்லாம் கொடுக்கும் கேப்டன், முதல் சீனிலேயே தீவிரவாதியை பிடித்தது எப்படி? என மருத்துவ ரீதியாக ஒரு காரணம் கூறுகிறார். இப்படி தான் சந்தேகப் பட்டதற்கெலலாம் விளக்கம் கூறும் கேப்டன், கதாநாயகி தன்னை அங்கிள் என கூப்பிடவும் இசைந்திருப்பது, அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரம் அவர்களுக்கு இடையேயான உறவை விளக்காதது குழப்பத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
வெளிநாடுகளில் தீவிரவாதிகள், சமூக விரோதிகளை ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரத்தும் போது வறுத்தகறியாகும் விருதகிரியில், மாதுரி இடாகி, அருண்பாண்டியன், மன்சூர் அலிகான், சண்முக ராஜன், சாம்ஸ், பி.வி.சிவம், கலைராணி, உமா பத்மநாபன், சந்தான பாரதி உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் பங்கு பெற்றிருந்தும், சுந்தர்.சி பாபுவின் இசை, கே.பூபதியின் ஒளிப்பதிவு, ஆர்.வேலு மணியின் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இருந்தும் விருதகிரியில் விஜயகாந்த்தே பெரிதாக தெரிகிறார். இதுதான் படத்தின் ப்ளஸ்! மைனசும் கூட!!






