வந்தான் வென்றான்
Posted in Vandhaan Vendraan Movie Review, latest tamil movie, tamil film review on 09/27/2011 12:08 pm by admin
“கோ”, “ரவுத்திரம்” என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் ஜீவா நடித்து வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் திரைப்படம், டாப்ஸி நாயகியாக நடித்திருக்கும் இரண்டாவது படம், ஹீரோ நந்தா வில்லன் அவதாரம் எடுத்திருக்கும் புதியபடம். “ஜெயம் கொண்டான்”, “கண்டேன் காதலை” உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணனின் மூன்றாவது படம்… என இன்னும்
பல சிறப்புகளுடன் கூடவே, எதிர்பார்ப்புகளுடன் ரிலீசாகியிருக்கிறது “வந்தான் வென்றான்”.
கதைப்படி ஒரே அம்மா, இரண்டு அப்பாக்களுக்கு (புரட்சி!) பிறந்தவர்கள் நந்தாவும், ஜீவாவும்! நந்தாவின் அப்பா இல்லாமல் போக, அவரது அம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்யும் ஜீவாவின் அப்பா, நந்தாவை என்னதான் பெற்ற பிள்ளை போல் பாவித்தாலும், ஜீவாவிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நந்தாவிற்கு சின்ன வயதிலேயே தாழ்வு மனப்பான்மை! அதன் வெளிப்பாடு தம்பியை கிணற்றில் தள்ளிவிட்டு, விவரம் அறியாவயதிலேயே மும்பைக்கு திருட்டு ரயில் ஏறும் நந்தா, அங்கு வளர்ந்து பெரிய தாதா ஆகிறார்.
மும்பையின் மொத்த தாதாக்களுக்கும் பெப்பே காட்டிவிட்டு முதல் இடத்தில்(!) இருக்கும் நந்தாவை தேடி வரும் ஜீவா (சின்னவயதில் கிணற்றில் தத்தளித்த ஜீவாவை ஊரும், உறவும் ஒன்று சேர்ந்து காபந்து செய்வது பிறகு
ப்ளாஷ்பேக்கில் வருகிறது…) அண்ணனை திருத்த தன் காதலையே பணயம் வைக்கிறார். ஜீவாவின் அண்ணன் நந்தா திருந்தினாரா? ஜீவாவின் காதல் என்ன ஆனது? நந்தா மீது இருக்கும் கொலை வழக்கு உள்ளிட்ட மும்பை போலீசின் எண்ணற்ற வழக்குகள் என்ன ஆயிற்று…? நந்தா-ஜீவா மீண்டும் இணைய ஜீவாவின் காதலி டாப்சியின் பங்கு என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொல்கிறது “வந்தான் வென்றான்” படத்தின் மீதிக்கதை! அதை இன்னும் சற்றே விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் மேலும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்பது குறை!
“கோ”, “ரவுத்திரம்” படங்களில் பார்த்த துருதுரு, விறுவிறு ஜீவாவை வந்தான் வென்றானிலும் பார்க்க முடிகிறது சுவாரஸ்யம். அதேநேரம் கதாநாயகி விஷயத்தில் கூட அவர் செய்யும் கற்பனைகள் ஹாஸ்யமாகி போவது படத்திற்கு பலவீனத்தை சேர்ப்பதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்.
நந்தாவை வில்லன் என்பதை விட வில்லானிக் ஷீரோ எனலாம். ஸ்மார்ட் வில்லன்! விபரம் புரியாத வயதில் தம்பி ஜீவா மீது சினம் கொள்வது ஓ.கே., அதேநேரம் விபரம் தெரிந்து வளர்ந்த பின்பும், தம்பி என தெரிந்தும் அவரை குற்றுயிரும் குலை உயிருமாக விட்டுச் செல்வதெல்லாம் ரொம்ப ஓவர் நந்தா!
அழகி அஞ்சனாவாக டாப்சி, ஜீவாவின் காதலியாக வருகிறார். இவரது பாத்திரம் கற்பைனை கதாபாத்திரம் என்பதை முன்கூட்டியே ஓரளவு யூகிக்க முடிவது படத்தின் மற்றுமொரு பலவீனம்!
பாம்பே பானிபூரி வாலாவாக வரும் சந்தானமும், அவரது காமெடியும் ஆறுதல், அதுகூட மற்ற படங்கள் அளவு இல்லாதது வருத்தம். ரஸின் ரஹ்மான், மாளவிகா, அழகம்பெருமாள் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அதே தேர்வை கதை விஷயத்திலும் இயக்குநர்
ஆர்.கண்ணன் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்! குருநாதர் மறந்துவிட்ட மும்பை தாதா விஷயங்களை சிஷ்யர் கண்ணன் தன் மூன்றாவது படத்தில் கையில் எடுத்திருப்பது ஏனோ புரியவில்லை!
எஸ்.தமனின் அதிரடி இசை, பி.ஜி.முத்தையாவின் அழகிய ஒளிப்பதிவு, கண்ணனின் இயக்கத்தில் எதிர்பாராத புதிய க்ளைமாக்ஸ் எல்லாம் சேர்ந்து, “வந்தான் வென்றான்” படத்தை “வந்தான் போனான்” என்ற அளவில் இல்லாமல் பார்த்து கொள்கிறது! பலே! பலே!!






