Archive for the ‘Thoonga Nagaram Movie Review’ Category

தூங்காநகரம்

நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்… என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் சொல்லியிருக்கும் படம்தான் தூங்கா நகரம்!

திண்டுக்கல், விருதுநகர் என ஆளுக்கொரு ஊரில் இருந்து கிளம்பி வந்து மதுரையில் தங்கி ஆளாளுக்கொரு பிழைப்பை பார்த்து வருபவர்கள் களவாணி விமல், நாடோடிகள் பரணி, ரேணிகுண்டா நிஷாந்த் மற்றும் தூங்கா நகரம் படத்தின் அறிமுக இயக்குனர் கவுரவ் நால்வரும். இவர்கள் நான்கு பேரும் குடிக்க வந்த இடத்தில் ஒரு ஓசி குடிகாரனை உதைப்பதற்காக ஒயின்ஷாப்பில் நண்பர்களான நல்லவர்கள்!

அதே ஒயின்ஷாப்பில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு பெரியவரின் பிரச்னையை கேட்டு அடிதடியின் இறங்கும் நால்வரும், தாங்கள் கை வைத்த இடம் பெரிய இடம் என தெரிந்ததும், பிய்த்துக் கொண்டு ஓடுகின்றனர். விதி வலியது அல்லவா? விடாமல் துரத்துகிறது! வென்றது இந்த நால்வருமா? பெரிய மனிதரா? என்பதை தூங்கா நகரம் படத்தின் மீதிக்கதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விளக்குகிறது. அதனூடே விமல் – அஞ்சலியின் சின்ன வயது ப்ளாஷ்பேக் நட்பு – பெரிய வயது காதல், பரணியின் பிள்ளைதாச்சி மனைவி மற்றும் குடும்பம், ஊமை நிஷாந்தின் உழைப்பால் ஊரில் படிக்கும் தம்பிகள், மின் மயானத்தில் பிணம் எரிக்கும் கவுரவின் செத்துப்போன மனசு, ஊர் பெரிய மனிதரின் வாரிசு செய்யும் ஜவுளிக்கடை டிரஸ்ஸிங் ரூம் செக்ஸ் டார்ச்சர்கள், அவரது அப்பா பண்ணும் கொடூர கொலைகள் என சகலத்தையும் ஜனரஞ்சகமாக கலந்து கட்டி தூங்கா நகரத்தை தூக்கி நிறுத்த முயற்சித்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆக‌ வேண்டும்.

வீடியோகிராபர் கண்ணனாக விழா வேத்திகள் ஆர்டர் பிடிக்க விமலும், அவரது அசிஸ்டெண்டும் பண்ணும் அலப்பறைகள் ஒரு பக்கம் காமெடி என்றால், விமல் – அஞ்சலியின் சின்ன வயது நட்பு ப்ளாஷ்பேக்கும், காதலும் கலக்கல் வெடி. விமல் வீடியோகிராபர் கண்ணனாகவே வாழந்திருக்கிறார். பரணி, நிஷாந்த், இயக்குனர் கவுரவ் உள்ளிட்டவர்களும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே பளிச்சிட்டிருக்கின்றனர்.

தெரு த்ரிஷாவாக கேபிள் டிவி தொகுப்பாளினியாக பந்தா பண்ணும் அஞ்சலியும், கொலைக்களமாக தெரியும் தூங்கா நகரத்தை கலைக்களமாக்க ரொம்பவே மெனக்கெட்டு ரசிகர்களை காதல் வயப்படுத்துகிறார். பேஷ்! பேஷ்…!!.

வில்லன் பெரிய தப்பட்டையாக கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரமும், அவரது தம்பியாக பு‌ரொடக்ஷன் மேனேஜர் கே.பாலகிருஷ்ணனும், மதுரையை மட்டுமல்ல… மதுரை மேல் ரசிகர்களுக்கு இருக்கும் மரியாதையை மேலும் மிளர வைக்கின்றனர். சிங்கம்புலி – பாண்டு உள்ளிட்டவர்களின் காமெடி ஆறுதல்!

சுந்தர் சி. பாபுவின் இசையில் மதுரையின் புகழ்பாடும் பாடல்களும் சரி, மற்ற பாடல்களும் சரி.. தாளம் போட வைக்கின்றன. அதேமாதிரி கே.விஜய் உலகநாத்தின் ஒளிப்பதிவில் மதுரைக்கும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் போய் வந்த திருப்தி தரும் பிரமாண்டம்.

மொத்தத்தில் புதியவர் கவுரவ்வின் எழுத்திலும், இயக்கத்திலும் தூங்கா நகரம் ரசிகர்களை தூங்காமல் வைத்திருக்கும் அளவு வித்தைகள் நிறைந்த துள்ளல் நகரம்!.