தம்பி அர்ஜூனா
Posted in Thambi Arjuna Film Review, latest tamil movie, tamil film review on 08/18/2010 09:32 am by admin
மகாபாரதத்தில் தர்மனுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவன் அர்ஜூனன். இப்படத்திலோ அர்ஜூனன் எனும் அன்பு தம்பிக்காக உயிரை கொடுக்கிறான் அண்ணன் தர்மன். கதைப்படி, பெரோஸ்கானும் ரமணாவும் அண்ணன் தம்பிகள். சின்ன வயதிலேயே அனாதைகளாகும் இருவரும் தாதா ஒருவரிடம் அடைக்கலமாகின்றனர். அந்த தாதாவிடம் தொழில் கற்றுக் கொள்ளும் அண்ணன் பெரோஸ்கான் (தர்மன்), தம்பி அர்ஜூனன்(ரமணா) அந்த தொழிலுக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவரை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிறார். ஏரோ நாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து பைலட் ஆக வேண்டும் எனும் லட்சியத்துடன் இருக்கம் ரமணா, அதற்காக தன் காதலைக்கூட துறக்கிறார். ஆனால் எதிர்பாராமல் அண்ணனின் விருப்பத்திற்கு மாறாக ரமணா இத்தொழிலுக்கு வர வேண்டிய சூழல். அவர் வந்தாரா? வில்லன்களை வென்றாரா? கதாநாயகியின் கரம் பிடித்தாரா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்க முயற்சிக்கிறது தம்பி அர்ஜூனா படத்தின் மீதிக்கதை.
தம்பி அர்ஜூனாவாக நடிகர் ரமணா முந்தைய படங்களைக் காட்டிலும் பிரமாதமாகக் நடித்திருக்கிறார். ரவுடியின் தம்பியாக இருந்து கொண்டு போலீஸ் கமிஷ்னரின் மகளையே காதலிப்பதும், கடத்தப்படும் காதலியை ரமணாவால்தான் காப்பாற்ற முடியும் என கமிஷ்னரே நம்புவதும், அந்திராவில் உள்ள ஆதிவாசிகள் பகுதிகளுக்குள் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் நாயகி ஆஷிமாவை ஒற்றை ஆளாகப் போய் ரமணா மீட்டு வருவதும் நம்பும் படியாக இல்லாதது பலவீனம்!!
அர்ஜூனன் ரமணாவிற்காக அண்ணன் தர்மாவாக வரும் பெரோஸ்கான் உயிரைவிடும் க்ளைமாக்ஸ் உருக்கம். வாங்கு தோங்காக வளர்ந்திருக்கும் பெரோஸ்கான் தர்மன் பாத்திரத்திற்கு சாலப் பொருத்தம். ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகளுக்கு என்ன வேலையோ அதே அளவு வேலைதான் இதிலும் அஷிமாவிற்கு. ஆனால் ரமணாவை காதலிக்கும் அந்தம்மா ஏன் உள்துறை மந்திரியின் மகனாக வரும் நனிபண்டாரத்துடன் ரெஸ்டாரண்ட் ரெஸ்டாரண்டாக திரிகிறார் என்பது புரியாத புதிர்.கமிஷ்னர் சுமன், வில்லன் நான் கடவுள் ராஜேந்திரன், பாலாசிங் அளவு முதல்வராக வரும் அருண்பாண்டியன்,
ரேகா, யுவராணி, சிங்கமுத்து ஆகியோர் எடுபடாதது பலவீனம்.
தினாவின் இசையும், மாதவராஜ் தத்தாரின் ஒளிப்பதிவும் புதியவர் விஜய் ஆர்.ஆனந்தின் எழுத்து இயக்கத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஆனால், இயக்குநரின் எழுத்து அளவிற்கு இயக்கம் இல்லாதது பலவீனம். ஆனாலும் தம்பி அர்ஜூனாவை அக்ஷன் பிரியர்கள் நம்பி பார்க்கலாம்! ஆக மொத்தத்தில், தம்பி அர்ஜூனா…’நம்பி போகலாம்னா…….’ (ஆக்ஷன் ரசிகர்கள் மட்டும்)






