Archive for the ‘tamil film review’ Category

வழக்கு எண் 18/9

வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் தான் “வழக்கு எண் 18/9″ படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! “காதல்” படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு காதல் படைப்பு மட்டுமல்ல… காதல் – காவல் காவிய படைப்பும் கூட!

கதைப்படி, ரோட்டோர டிபன் கடையில் வேலை பார்க்கும் அநாதை வேலுவுக்கு, அவன் கடையை ஒட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி மீது காதல். ஆனால் இந்த காதல் கசிந்துருவதற்குள், வேறு சில காரணங்களால் ‌வேலு மீது தப்பான அபிப்ராயம் கொண்டு வெறுப்பை உமிழ்கிறார் ஜோதி! இந்நிலையில் ஜோதி வீட்டு வேலை செய்யும் வசதியான வீட்டுப்பெண் ஆர்த்தி மீது அதே ப்ளாட்டில் வசிக்கும் அர்த்தியை விட வசதியான தினேஷூக்கு காதல் போர்வையில் காமம்! அந்த காமமும், காதலும் ஆர்த்தியை, ஆபாசமாக தனது செல்போனில் படமெடுத்து அதை நண்பர்களின் போனில் உலவ செய்து, பெருமை பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் தினேஷூக்கு ஏற்படுகிறது. இது தெரியாமல் தினேஷின் வலையில் விழும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு தினேஷை விட்டு விலக, தன் நோக்கம் நிறைவேறாத வருத்தத்தில் தினேஷ், ஆர்த்திக்கு அடிக்கும் ஆசிட், குறிதவறி ஜோதியின் முகத்தையும், முக்கால்வாசி உடம்பையும் பதம்பார்க்கிறது.

ஜோதியின் அம்மா உள்ளிட்டவர்களின் கூற்றுபடி ஆசிட் அடித்தது வேலு தான் என விசாரணை கைதியாக பிடித்து வரும் ‌காவல்துறை, காசுக்கு ஆசைப்பட்டு தனது குள்ளநரித்தனத்தால் அவரையே குற்றவாளியாகவும் கோர்ட்டின் முன் நிறுத்துகிறது. இந்த வழக்கில் இருந்து வேலு தப்பித்தாரா…? உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா…? ஜோதியின் மீதான வேலுவின் காதல் என்னாயிற்று…? என்பது உள்ளிட்ட இன்னும் பல எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடையளிக்கிறது வழக்கு எண் 18/9 படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்பான மீதிக்கதை!

வேலுவாக புதுமுகம் ஸ்ரீ, ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடை வேலையாளாகாவே வாழ்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜோதியாக வரும் வீட்டு வேலைப்பெண்ணாக சட்டை, பாவாடையில் கையில் தூக்குவாளி கூடையுடன் வரும் ஊர்மிளாவும் காரமிளையாக கலக்கி எடுத்திருக்கிறார். இவர்களை மாதிரியே தினேஷாக வரும் மிதுன் முரளி, ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ் உள்ளிட்ட புதுமுகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!

மேற்படி இந்த ஜோடிகளைக் காட்டிலும் ஒருபடி மேலாக ஸ்ரீயின் அப்பா-அம்மாவாக ஒரு சில காட்சிகளே வரும் வேடியப்பன் எனும் செந்தில், ராணி, தினேஷ் எனும் மிதுனின் தாயாக மினிஸ்டரின் கீப்பாக வரும் ராதிகா, ஆர்த்தி எனும் மனிஷாவின் தாய் தந்தையாக வரும் கவுதம், வித்யா-ஈஸ்வர், ஊர்மிளா எனும் ஜோதியின் தாயாக வரும் பார்வதி, ஸ்ரீக்கு வேலை வாங்கி தரும் “ஒரு மாதிரி” தோழியாக தேவி எனும் ரோஸி உள்ளிட்ட துணை, இணை நடிகர்கள் கூட பிரமாதம் போங்கள்… எனும் அளவு நடித்திருப்பது படத்தின் பெரியபலம்! இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நல்லவர் மாதிரி வாயாலேயே “வடை சுடும்” புதுமுகம் முத்துராமனும், ஸ்ரீயின் ரோட்டுகடை உதவியாளனாக காமெடி பண்ணும் சின்னசாமியும் சற்றே வறண்ட கதைக்களத்தை மறைத்து கலர்புல்லாக படத்தை பிரமாதமாக தூக்கி நிறுத்தி, வழக்கு எண் படத்திற்கு வெற்றி வாக்குளை சேர்க்கின்றனர். பேஷ்! பேஷ்!!

முதல்பாதி சற்று மெதுவாக நகர்வதும், படம்முழுக்க ஒருவித சோகம் பரவிக்கிடப்பதும் சற்றே டாக்குமெண்ட்ரி ‌எபெக்ட்டை கொடுத்தாலும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் அழகிய பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும், எஸ்.டி.விஜய் மில்டனின் வித்தியாசமான புதுவித ஒளிப்பதிவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்தாழமிக்க எழுத்தும்-இயக்கமும் மைனஸ் பாயண்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பிளஸ் பாயிண்டுகளை ‌நோக்கியே படத்தை இழுத்து சென்றிருப்பது, வழக்கு எண்ணை நம் வாழ்க்கையாக பிரதிபலிக்க செய்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் “வழக்கு எண் 18/9″ , வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் என்றென்றும் வாழும் “நம்பர்-ஒன்!”

 

லீலை

பெண்களை‌ போகப் பொருளாகவும், ஐஸ்ட் டைம் பாஸாகவும் நினைக்கும் ஹீரோவிற்கும், ஹீரோ மாதிரி கேரக்டர்களிடம் கேர்புல்லாக இருக்க வேண்டும் என எக்கச்சக்கமாக தனது பெண் சுற்றத்திற்கும், நட்பிற்கும் அடிக்கடி எச்சரிக்கை மணி அடிக்கும் ஹீரோயினுக்குமிடையில் ஏற்படும் காதலும், அதற்காக ஹீரோ போடும் நாடகங்களும், நடவடிக்கைகளும் தான் “லீலை” படத்தின் ‌மொத்த கதையும்!

தன் கல்லூரி தோழிகளை காதலித்து ஏமாற்றிய கார்த்திக் மீது கதாநாயகி மலருக்கு அப்படி ஒரு வெறுப்பு! கார்த்திக்கும் கருணை மலர் எனும் அட்வைஸ் மலரின் முழுப்பெயரை கேட்டாலே அப்படி ஒரு வெறுப்பு. ஆனால் ஒரு சில வருடங்கள் கழித்து தான் வேலை பார்க்கும் ஐ.டி., கம்பெனியிலேயே வேலை பார்க்கும் மலர் அப்படி ஒரு அழகு என தெரிந்ததும், கார்த்திக்கிற்கு மலர் மீது அப்படி ஒரு காதல் ஈர்ப்பு! தான் கார்த்திக் என தெரிந்தால் தன் காதல் மலர் ஆகவேண்டிய கருணைமலர், காட்டுமலர் ஆகி கசப்பை வீசுவாள்… என எண்ணும் கார்த்திக், அவளுக்காக சுந்தர் எனும் பெயரில் நாடகமாடுகிறான், நடமாடுகிறான். ஒருகட்டத்தில் கார்த்திக்காலேயே கார்த்திக்தான் சுந்தர், சுந்தர் தான் கார்த்திக் என தெரிய வரும்போது, கருணைமலர், அவனது காதல் மலராகவே இருந்தாரா…? இல்லை காட்டுமலராக கசந்தாரா…? என்பது க்ளைமாக்ஸ்!

கார்த்திக் மற்றும் சுந்தராக புதுமுகம் ஷிவ், நன்கு நடிக்கத் தெரிந்த முகமாக அறிமுகமாகியிருக்கிறார். அவரை மாதிரியே கருணை மலர் எனும் மலராக கதாநாயகி மான்சியும் நச் என்று நடித்திருக்கிறார். இருவருமே விறுவிறு கதைக்கேற்ற செம துருதுரு!

விக்கியா வரும் சந்தானம், விலா நோக சிரித்து விக்கலெடுக்க வைக்கிறார். சுஜாவாக ஹீரோவின் நல்ல தோழியாக வரும் சுஹாசினியும் பிரமாதம்!

ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு – அழகுப்பதிவு! வாலி, பா.விஜய் இவர்களின் பாடல் வரிகளில், சதீஷ் சக்கரவர்த்தி இசை – சக்ரவர்த்தியாக மிளிர்ந்திருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யராம். ஒரு சில இடங்களில் குருவையே மிஞ்சி நிற்கிறார் சிஷ்யர். பலே, பலே!

கதை மொத்தமும் ஐ.டி.கம்பெனி ஒன்றின் உள்ளேயே நடப்பது சற்றே போரடித்தாலும், அழகிய ஒளிப்பதிவும், அழகிய அயல்நாட்டு லொகேஷன்களில் படமாகியிருக்கும் பாடல் காட்சிகளும் லீலை-யை வெற்றி மாலை ஆக்கிவிடுகின்றன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில் “லீலை” – “கலை!”

 

மை

கட்சி மேடைகள்ல சுனாமி சுப்பு (விஷ்ணு ப்ரியன்) மைக் பிடிச்சு பேச ஆரம்பிச்சா, கேட்டுக்கிட்டு இருக்கறவன் வேட்டியில தீ பத்திக்கும். அந்தளவுக்கு தீயாக பேசக்கூடிய ஆளு. அதுக்காக அவரை அரசியல்வாதின்னு நினைச்சுட வேண்டாம். கட்சிக்கூட்டங்கள்ல பெரிய தலைகள் வர்ற வரைக்கும் கூட்டம் கலையாம பார்த்துக்கற ஒரு டைம்பாஸ் பேச்சாளர். அம்புட்டுதான்! இந்த சுப்புவுக்கும், பத்துக்கு பத்து ரூம்ல ஒரு லோக்கல் சேனல் நடத்திட்டு, அதை ஸ்டார் டிவி மாதிரி ஆக்கணும்!ங்கற கனவோட இருக்கற பானுமதிக்கும் (ஸ்வேதா பாசு) படம் ஆரம்பிச்சு ஒரு ஒன்றரை மணி நேரம் கழிச்சு கல்யாணம் நடக்குது. அப்போ… கல்யாணத்துக்கு முன்னாடி? கல்யாணத்துக்கு அப்புறம்?

கட்சிக்கூட்டம் இருக்கிற நாட்கள்ல பணத்துக்கு பஞ்சமில்லாம சுத்தற சுப்பு, மந்தநாட்கள்ல, திருட்டு வேட்டைக்கு கிளம்பிடுவாரு. அப்படி ஒரு நல்ல மனுஷன். இந்த சுப்புவுக்கு ஒரு சூப்பர் ப்ளாஷ் பேக்! சின்னவயசுல மக்காச்சோளத்துக்காக எதையும் துணிஞ்சு செய்ற சுப்பு… தன் தோழியான எட்டு வயசு பானுமதிக்கும் தனக்கும் இருந்த நட்பை நண்பர்கள்கிட்ட அசிங்கப்படுத்த, பானுமதி சண்டை போட்டு கா விட்டுட்டு பிரிஞ்சுடுறாங்க. ஆனாலும் பானுமதி அப்பாகூட தொடர்புலேயே இருக்கற சுப்பு, 20 வருஷத்துக்கு அப்புறம் பானுமதியோட மனசை மாத்துறாரு. சுப்புவை திருத்தி நல்ல வழிக்கு கொண்டு வரணும்!னு நினைக்கிற பானுமதி, பிணம் கூட எரியுறப்போ எழுந்து நிக்குது! நீ உயிருள்ள மனுஷன், எழுந்து நிற்கணுமா? இல்ல… எரிஞ்சு சாம்பலாகணுமா?ன்னு முடிவு பண்ணிக்கோ!ன்னு சொல்ல… இடைவேளை.

நாம பாரத்தை இறக்கிட்டு வர்றதுக்குள்ள, சுப்பு மனசுல அப்படி ஒரு மாற்றம். தீவிர அரசியல்ல இறங்கிடலாம்!ன்னு முடிவெடுத்து தன்னை மேடையேத்தி தனக்கு மைக் கொடுத்த கட்சி தலைவன்கிட்டேயே போய் கவுன்சிலர் வாய்ப்பு கேட்க, தலைவன் அவமானப்படுத்தி அனுப்புறான். கோபப்பட்ட சுப்பு சுயேச்சையா நின்னு ஜெயிக்க, பானுமதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊருக்கு நல்லது பண்றாரு. இதனால கோபப்படற ஊருக்கு நல்லது பண்றாரு. இதனால கோபப்படற தலைவனை புத்திசாலித்தனமா(!) காலி பண்றாரு. இப்படி மக்கள்கிட்ட ஓட்டு வாங்கி ஹீரோ தீவிரமா அரசியல் பண்றதால… படத்துக்கு பேர் மை.

பழைய கதை. பலவீனமான திரைக்கதை. ஆனாலும், இது மோசம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு படத்துல எல்லாக் காட்சிகளும் நல்லாவே இருக்கு. நடிகர்கள்ல தொடங்கி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்ன்னு அத்தனைபேரும் தங்களோட வேலையை சரியா பண்ணியிருக்காங்க. ஆனாலும் படம் பார்த்த திருப்தி இல்லை.

மொத்தத்தில் “மை” – “மனதிலும் ஒட்டாத மை”

ரசிகன் குரல் – எல்லா சீனும் எங்கேயோ பார்த்தமாதிரியே இருக்குதே!

 

அடுத்தது

தமிழ்ல குறைஞ்ச செலவுல த்ரில்லர் படம் எடுத்தா கதை என்னவா இருக்கும்? ஊரை விட்டு ஒதுக்குப்புறமா ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பங்களாவுக்கு 4,5 ‌பேர் போவாங்க… அவங்க வரிசையா சாகடிக்கபடுவாங்க. கடைசியில அவங்களை கொன்னது யாரு? காரணம் என்ன?னு காட்டுவாங்க. ‌கரெக்ட்! அடுத்தது படத்தோட கதையும் அதுதான். என்ன.., 4,5 பேருக்கு பதில் 10 பேர் ஒதுக்குப்புற பங்களாவுக்கு பதில் தீவுல இருக்கற ஒரு பங்களா.

ஆள் இல்லாத தீவுல இருக்கற ஒரு பங்களாவுல தனியா(?) 10 நாள் தங்கியிருந்தா 10 கோடி ரூபாய் ஜெயிக்கலாம்!ன்னு ஒரு டி.வி.யில போட்டி நடத்துறாங்க. அதுல கலந்துக்க சமையல்காரன் (வையாபுரி), டாக்டர் (இளவரசு), வக்கீல் (மீனாள்), லோக்கல் ஏரியா பெண் (ஆர்த்தி), கடத்தல்காரன் (ஸ்ரீமன்)… இப்படி 10 பேர் தேர்வாகுறாங்க. டி.வி. நிகழ்ச்சியை காரணமா வைச்சு இங்க கூட்டிட்டு வந்து கொலை பண்றாங்க!ங்கறது தீவுக்கு வந்து அடுத்தடுத்து ரெண்டு கொலைகள் விழுந்ததும் தான் இவங்களுக்கு தெரிய வருது. தப்பிச்சு போக வழியில்லாத நிலைமையில் ஒவ்வொருத்தரா சாகறாங்க. இதுக்கிடையில இவங்களை சாகடிக்கிறதுக்கான காரணத்தை திரைபோட்டு காட்டுகிறார் கொலைகாரர்(நாசர்). எத்தனை பேர் தப்பிச்சாங்க?ங்கறது மீதி கதை.

ஜென்ம நட்சத்திரம், நாளைய மனிதன் மாதிரி பெரிய த்ரில்லர் படங்களை எடுத்த இயக்குனரோட படமா இது! நல்லா இருக்குன்னு சொல்ல படத்துல ஒரு விஷயம்கூட இல்லை. நாடகத்தன்மையான நடிப்பு, சுவாரஸ்யமே இல்லாத திரைக்கதைன்னு படம் முழுக்க குறைகள் அதிகமா தெரியுது. பெயரளவுக்கு கூட படத்துல லாஜிக் இல்லை. கேமராவும், பின்னணி இசையும் தான் த்ரில்லர் படத்துக்கு பலமே! இங்கே இரண்டுமே பெரிய சொதப்பல். குறிப்பா கேமரா… 3டி படத்தை கண்ணாடியை கழட்டிட்டு அவுட் ஆப் போகஸ்! நாசர், இளவரசு, வையாபுரின்னு நல்ல நடிகர்கள் இருந்தும் யாருக்கும் நடிக்கறதுக்கு படத்துல வாய்ப்பு இல்லை.

மொத்தத்தில் அடுத்தது, பயங்கரமான படம் ஜாக்கிரதை

ரசிகன் குரல் – கொலை பண்றாங்க… கொலை பண்றாங்க!

 

ஊ ல ல லா

பிரபல பிரமாண்ட பட அதிபர் ஏ.எம்.ரத்னத்தின் வாரிசு, இளம் இயக்குநர், இளம் நடிகர், ரவி கிருஷ்ணாவின் சகோதரர் என பன்முகங்கொண்ட இயக்குநர் ஜோதி கிருஷ்ணா, தனது இயக்கத்தில் கதாநாயகர் அவதாரமும் எடுத்திருக்கும் திரைப்படம் தான் “ஊ ல ல லா…!”

கதைப்படி தன்னை பார்க்கும் போதெல்லாம் கடுப்படிக்கும் அப்பா, அடுப்படியே கதி என கிடந்தாலும் தன் மீதும் குடும்பத்தின் மீது பாசங்காட்டும் அம்மா, ரெண்டாங்கெட்டான் வயதில் ஒரு தம்பி, எங்க கூப்பிட்டாலும் ஏன்? எதற்கு.? எனக் கேட்காமல் பைக் பில்லியனில் ஏறிக் கொள்ளும் நட்பு, பார்க்கும் பெண்கள் எல்லாம் தன்னுடன் பழக மாட்டார்களா…? என ஏங்கும் மனசை உடைய வயசு! இதுதான் சூர்யா எனும் ஹீரோ ஜோதி கிருஷ்ணா! இவருக்கு பாராமுகங்காட்டும் இளம் பெண்களில் ஒருத்தியை‌யாவது பிடித்து நட்பாக்கி, லவ்வாக்கி, அவர் மூலம் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் உரசி பார்த்துவிட வேண்டுமென்பது நப்பாசை அல்ல…! லவ் ஆசை…! அப்படிப்பட்ட சூர்யா-ஜோதி கிருஷ்ணாவிடம் பிரீத்தி எனும் திவ்யா பண்டாரி வகையாக சிக்குகிறார். காதல் கூடாது, நட்பு கிடையாது என கட் அண்ட் ரைட்டாக இருக்கும் திவ்யாவை, மெல்ல மெல்ல கவிழ்த்து நட்பாக்கும் ஜோதி கிருஷ்ணா, அந்த நட்பை தப்பாக பயன்படுத்தி பல பெண்களை மடக்கி அவர்களுடன் சுற்றுகிறார். ப்ரீத்தி எனும் திவ்யா பண்டாரிக்கோ ஜோதி மீதுள்ள நட்பு, மெல்ல மெல்ல காதலாக கசிந்துருகிறது. ஆனால், அதை சட்டை செய்யாத ஜோதி கிருஷ்ணா, பல பெண்களை வட்டமடித்து கொட்டமடிக்கிறார். ஜோதி கிருஷ்ணா திருந்தினாரா…? திவ்யா பண்டாரி வருந்தினாரா…? என்பது ஊ ல ல லாவின் மீதிக்கதை!

அப்பாவிற்கு அடங்காத பிள்ளையாக, அம்மாவின் பாசத்திற்கு மயங்கும் வாலிபராக, காதலிகளுக்காக ஏங்கும் இளைஞராக, நட்புக்கு நயவஞ்சகம் செய்யாதவராக ஜோதி கிருஷ்ணா சூர்யா எனும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என சொல்லும் அளவிற்கு வாழ முயற்சித்திருக்கிறார்! நடிப்பு வருகிறது என்றாலும் உப்பலான முகமும், உடம்பும் அதை தெரியவிடாமல் தடுக்கிறது. சற்றே சதை போட்டிருப்பதை தவிர்த்திருந்தால் ஜோதி இந்த தடையை தடுத்திருக்கலாம். தம்பி ரவிக்கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய ஆக்டிங் டிப்ஸூம் வாங்கி வந்து அடுத்து படத்தில் ஜோதி நடிக்க வேண்டும் என்பது நம் அவா!

நாயகர் திவ்யா பண்டாரி வருகிறார் போகிறார், சிரிக்கிறார், பைக்கில் பறக்கிறார்… தட்ஸ் ஆல்! ஜோதியின் அப்பாவாக தலைவாசல் விஜய், அம்மா ராணி, திவ்யா பண்டாரியின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, கஞ்சா கருப்பு, சேகர் பிரசாத், சிட்டி பாபு, பக்கோடா பாண்டி, சாய் சுந்தர், கவுரவ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். சேகர் சந்திராவின் இசை இனிமையாக இருக்கிறது. ஆர்.ஜி.சேகரின் ஒளிப்பதிவு அசரடிக்கிறது. எல்லாமே ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா நடிக்க போகாமல் திரைக்கதை, இயக்கத்தில் இன்னும் முழுமூச்சாக இறங்கி இருந்தார் என்றால், “ஓஹோ ல ல லா” என்றில்லாமல் இருந்திருந்தாலும், உண்மையாகவே “ஊ ல ல லா” என்றிருக்கும்.