Archive for the ‘Sathurangam Movie Review’ Category

சதுரங்கம்

டல்லடித்து போயிருக்கும் நடிகர் ஸ்ரீகாந்தின் மார்கெட்டை தூக்கி நிறுத்த வந்திருக்கும் புதியபடம் “சதுரங்கம்”. இயக்குநர் கரு.பழனியப்பன்-ஸ்ரீகாந்த் கூட்டணியில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருக்க‌ வேண்டிய திரைப்படம். சில, பல காரணங்களால் லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வெளிவந்திருக்கிறது.

அநியாயத்தை கண்டால் அதை அப்படியே கட்டம் கட்டி பத்திரிக்கையில் பிரசுரித்து பல தரப்பையும் எதிர்க்கும் துடிப்பும், துணிவும் மிக்க பத்திரிக்கை நிருபர் ஸ்ரீகாந்த்! இதனால், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலும் எக்கச்சக்க எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் ஸ்ரீயின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார். சோனியாவை கடத்தியது யார்…? கடத்தப்பட்ட சோனியா மீட்கப்பட்டாரா இல்லையா…? காதலியை மீட்க ஸ்ரீகாந்த் என்ன செய்தார்? என்பதுதான் “சதுரங்கம்” படத்தின் மொத்த கதையும்!

இதுநாள் வரை ரொமாண்டிக் ஹீரோவாக மட்டும் உலா வந்த ஸ்ரீகாந்த் ஆக்ஷ்ன் ஹிரோ அவதாரம் எடுத்திருக்கிறார். குட்டை தலைமுடி, மூக்கு நுனி கோபம், கண்ணியமான பார்வை என்று மிடுக்காக மிரட்டியிருக்கிறார் ஸ்ரீ. ஆக்ஷ்ன் ஹீரோ ஆகிவிட்டதால் ரொமாண்டிக்-லவ் எபிசோட்டிற்கு லீவும் கொடுத்து விடவில்லை. அந்தப்பக்கமும் சோனியாவுடன் சும்மா புகுந்து புறப்பட்டு, மனிதர் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தி இருக்கிறார் என்றால் மிகையல்ல! பத்திரிக்கை நிருபர் ஸ்ரீகாந்தின் முகத்தில் இப்பட இயக்குநரும், முன்னாள் பத்திரிக்கையாளருமான கரு.பழனியப்பன் தெரிகிறார் என்பதும் மிகையல்ல!

சோனியா அகர்வாலும் தன் பங்கிற்கு நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். தன் காதலர் வேலை பார்க்கும் பத்திரிக்கையை ரெகுலராக வீட்டிற்கு பேப்பர் போடும் பையனை போட சொல்வதில் தொடங்கி கடத்தப்பட்ட இடத்தில் கிடைக்கும் கேப்பில் போனை திருடி காதலனுக்கு தகவல் சொல்லும் காட்சிகள் வரை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்திருக்கும் சோனியாவிற்கும், இந்தபடம் இழந்த மார்க்கெட்டை பெற்று தருமென்றால் மிகையல்ல!

ஸ்ரீ-சோனியா ஜோடி மாதிரியே கணேஷ் யாதவ், “பிதாமகன்” மகாதேவன், மணிவண்ணன், ஸ்ரீமன், மயில்சாமி, இளவரசு என ஒவ்வொருவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு

வித்யாசாகரின் இனிமை கொஞ்சும் மெலடி இசையும், திவாகரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்! என் காதலியை கடத்தலைங்கறதுக்காக நீ நல்லவனாயிட முடியாது… எனும் ஒற்றைவரி டயலாக்போதும், இயக்குநர் கரு.பழனியப்பனின் சாதுர்யத்தை பறைசாற்ற! அதேநேரம் க்ளைமாக்ஸ் சண்டை காட்சியில் மிஸ்ஸாகும் லாஜிக் விஷயங்களில் இன்னும் சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் “சதுரங்கம்” சபாஷ் என்றிருக்கும் மொத்த திரையரங்கமும்!