போட்டா போட்டி
Posted in Potta Potti Movie Review, latest tamil movie, tamil film review on 08/16/2011 08:08 am by admin
கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், தமிழ் சினிமாவில் நாயகர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் “போட்டா போட்டி!”
ஒரே பெண்ணுக்கு முறைமாமன்கள் இருவர் போட்டி போட, அவர்கள் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடத்தி அதில் எந்த அணி ஜெயிக்கிறதோ, அந்த அணி தலைவருக்கு பெண்ணை கட்டி வைப்பது என முடிவு செய்கிறது ஊர் பஞ்சாயத்து. அதன்படி கிரிக்கெட் பயிற்சிக்கு தேடும் இரு குரூப்பிடமும், சிக்கி சின்னா பின்னமாகும் கேரக்டர் சடகோபன் ரமேஷூக்கு… இதனோடு, அந்த கிராமத்தான்கள் இருவரும் கட்டிக் கொள்ள துடிக்கும்
அவர்களது முறைப்பெண், சடகோபன் ரமேஷை காதலிக்க, ரமேஷின் கடைக்கண் பார்வையும் அவர் மீது விழுகிறது. அப்புறம்…? அப்புறமென்ன நாயகி, நாயகர் ரமேஷூக்கா…? அல்லது அந்த முரட்டு கிராமத்தான்களுக்கா…? என்பது க்ளைமாக்ஸ்! கூடவே கிரிக்கெட் போட்டியில் வென்றது ரமேஷ் பயற்சி அளித்த அணியா…?, போலி பயிற்சியாளர் மயில்சாமி பாவ்லா செய்த அணியா…? என்பதை வித்தியாசமும், விறுவிறுப்புமாக, காமெடியும் கலகலப்புமாக சொல்லி கலக்கி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ்!
கிரிக்கெட் பிளேயர் சடகோபன் ரமேஷாகவே பாத்திரம்
ஏற்றிருப்பதால் பளிச்சிட்டிருக்கிறார் ரமேஷ். முரட்டு காமெடி கிராமத்தான் கொடைவாணனாக ஆர்.சிவம் என்பவரும், அவரது அஸிஸ்டண்ட் அவதாரமாக கணேஷூம் கலக்கி இருக்கின்றனர். முரட்டு கொலைவாணனாக உமர், சரியான வில்லனாக விஸ்வரூபமெடுத்திருக்கிறார். போலி பயிற்சியாளர் மயில்சாமி தன் பாணியில் கலகலப்பு காமெடி பந்தி வைத்து படத்தை பலமாக்குகிறார்.
அருள்தேவ் இசை, கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட யதார்த்தம் பலவற்றுடன், யுவராஜின் எழுத்து இயக்கத்தில், “போட்டா போட்டி”, “பட்டிதொட்டி” எங்கும் பட்டையை கிளப்புவது நிச்சயம்!






