Archive for the ‘Pillayar Kovil Kadaisi Theru Movie Review’ Category

பிள்ளையார் தெரு கடைசி வீடு

வில்லேஜ் வெட்டி ஆபிஸர் “ஜித்தன்” ரமேஷ், தங்கையுடன் லீவுக்கு ஊருக்கு வரும் அவரது தோழியை காதலிக்க தொடங்குகிறார். பாசத்துக்காக ஏங்கும் அந்த தங்கையின் தோழியும், ரமேஷை லவ்வுகிறார். ஆனால், பெற்‌றோரும், உற்றாரும் ரமேஷூக்கு அவரது அத்தை மகளையே கட்டி வைக்க வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கின்றனர். நாயகன் – நாயகியின் காதலுக்கு அத்தை மகள் மட்டுமல்ல, ஆறுமாதத்தில் ஹீரோவை சாகடிக்க துடிக்கும் பெயர் புரியாத கேன்சர் வியாதி ஒன்றும் தடையாக பார்க்கிறது. நாயகனும், நாயகியும் தடை பல கடந்து இணைந்தனரா…? நாயகன் மோசமான அந்த வியாதியால் இறந்தாரா…? என்பது மீதிக்கதை!

இந்த கதையில் நாயகனின் வியாதியை, நாயகிக்கு இருப்பதாக முதலில் ரசிகர்களை சாமர்த்தியமாக நம்ப வைத்திருக்கும் இயக்குநர் நிச்சயம் கெட்டிகாரர் தான். ஆனால் அவரது கெட்டிக்காரத்தனம் படத்தின் வேகத்திலும் வெளிப்படாதது சற்றே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு பெரிய இடைவெளிக்குப்பின் “ஜித்தன்” ரமேஷ் ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், சென்டிமெண்ட் என அனைத்திலும் அசத்தி இருக்கிறார். முற்பாதியில் ஜாலி பேர்வழியாகவும், பிற்பாதியில் வியாதி மனிதராகவும், ரசிகர்கள் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விடுகிறார் என்றால் மிகையல்ல!

நாயகி சஞ்சிதாவும், இரண்டாம் நாயகி சுஹாசினியும் போட்டி போட்டி நடித்திருக்கின்றனர் பேஷ்! பேஷ்! பரோட்டா சூரியும், அவரது நண்பர்களும் காமெடி எனும் பெயரில் சில இடங்களில் சிரிக்கவும், பல இடங்களில் கடிக்கவும் செய்கிறார். அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா துளசி(மாஜி நாயகி) இளவரசு, போஸ்வெங்கட், நெல்லைசிவா, சிட்டுபாபு இவர்களுடன் பிரகாஷ்ராஜூம் கெஸ்ட் ரோலில் பிரகாசித்திருக்கிறார்!

“அவர் உங்களுக்கு என்ன வேணும்” என கேட்கும் டாக்டரிடம், “அவர் எனக்கு கடைசிவரைக்கும் வேணும்…” என ஹீரோயின் வசனம் பேசும் காட்சி, காதலிக்காக இதை, தழை, கிளை, கிழங்குளால் ஹீரோ பிள்ளையார் சிலை செய்யும் காட்சி, அத்தை மகனை எனக்கு கட்டி வச்சிடாத தாயி… என இரண்டாம் நாயகி வேண்டி நிற்கும் காட்சி, உள்ளிட்ட புதுமைகளில் இயக்குநர் திருமலை கிஷோர் எதிர்பார்ப்பை தூண்டிவிடுகிறார். எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு, புதியவர் சக்தியின் இசை, இரண்டும் இயக்குநரின் எழுத்துக்கும், இயக்கத்திற்கும் பக்க பலமாக இருந்து “பிள்ளையார்தெரு கடைசிவீடு” படத்தை முதல் இடத்திற்கு கொண்டு வர முயன்றிருக்கின்றன.