பாசக்கார நண்பர்கள்
Posted in Pasakara Nanbargal, latest tamil movie, tamil film review on 06/07/2011 05:57 am by admin
“தம்பி அர்ஜூனா” படத்தின் மூலம் இரண்டு நாயகர்களில் ஒருவராக தமிழுக்கு அறிமுகமான பெரோஸ்கான், தன் மகன் அஜ்மல்கானை கதாநாயகராக களம் இறக்கி, இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் படம்தான் “பாசக்கார நண்பர்கள்”.
அனாதை ஆசிரமத்தில் வளரும் அனாதை சிறுவன் அருண், பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டே பாக்ஸிங் பயிற்சி மையம் ஒன்றில் பகுதிநேர வேலை பார்க்கிறான். பாக்ஸிங் சாம்பியனாக வேண்டும் எனும் அவனது லட்சியத்தை எட்ட நின்றே கவனிக்கும் பயிற்சியாளர் பெரோஸ்கான், கிட்ட வந்து எப்படி நிறைவேற்றி வைக்கிறார் என்பதுடன், அனாதை ஆசிரமத்திற்கு ஏற்படும் இடப்பிரச்சனை, பள்ளி மாணவர்களின் ஆண்-பெண் தூய நட்பு, அம்மா சென்டிமெண்ட், “மூட்” முதலாளிகளிடம் வீட்டு வேலைக்கார பெண்கள் படும்பாடு உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை கலந்துகட்டு, கலக்கலாக கதை சொல்ல முயற்சித்து, அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார் “பாசக்கார நண்பர்கள்” படத்தின் கதை, வசனகர்த்தாவும், இயக்குநருமான பெரோஸ்கான்!
அநாதை சிறுவன் அருணாக அஜ்மல்கான், பால்வடியும் முகத்துக்கு சொந்தக்காரர் என்றாலும் பாக்ஸிங் ஃபைட் சீன்களில் அந்த பால்வடியும் முகத்தில் ஆக்ரோரஷமும் வடிய அசத்தி இருக்கிறார். கதாநாயகி திவ்யா நாகேஷ், கவர்ச்சி நாயகியாக தன்னிடம் இருக்கும் ப்ளஸ் பாயிண்ட்டுகளை எல்லாம் காட்டாமல், கதையின் நாயகியாக பள்ளி மாணவியாக பாந்தமாக வந்து போகிறார்.
வில்லன் மோனியாக வரும் ஆதித்யா, அம்மாம் பெரிய கட்டுமஸ்தான உடம்புடன், அஜ்மலிடம் அடிவாங்கும் காட்சிகள் நம்ப முடியவில்லை. பாலாசிங், “பாய்ஸ்” ராஜன், ரிஷிராஜ் உள்ளிட்டவர்கள் வந்து போகும் காட்சிகள் அக்மார்க் டிராமா!
தினாவின் இசையில், அம்மா பாடல்… உருகாதவர்களையும் உருக வைக்கும். மோகனராமனின் ஒளிப்பதிவு சில இடங்களில் பலம், பல இடங்களில் பலவீனம். படத்தொகுப்பாளர் எஸ்.பி.அகமது, இப்பட எடிட்டிங்கில் இருந்த போது கத்திரிகோலை தொலைத்துவிட்டார் போலும்!

க்ளைமாக்ஸ் பாக்ஸிங் ஃபைட் ஒன்று போதும் கொடுத்த காசுக்கு, என்றாலும் சம்மர் சீசனில் பீச்சில் குளிக்கப்போகும் இளைஞர்களை எச்சரிக்கும்படியான காட்சியும், ஊருக்கு போகும் வூட்டுக்காரம்மாக்களையும், வீட்டு வேலைக்குப்போகும் வேலைக்காரம்மாக்களையும் எச்சரிக்கும் காட்சியும் எல்லாவற்றையும் மிஞ்சி கண்ணையும், கருத்தையும் கவருவது படத்தின் பலம்!
மொத்தத்தில் லாஜிக் மீறல்கள் நிறைய இருந்தாலும் “பாசக்கார நண்பர்கள்” – “பாவம் ரசிகர்கள்” என்று சொல்ல வைக்கவில்லை. அந்தவகையில் பலே! பலே!!






