Archive for the ‘Narthagi Movie Review’ Category

நர்த்தகி

இதுநாள் வரை அரவாணிகளை கொச்சைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, அரவாணிகளை தங்களது இச்சைக்கு படுத்தி வந்தவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சீர்திருத்த திரைப்படம்தான் நர்த்தகி.

அவனுள் பிறந்த அவள் அவளான அவனின் கதை எனும் அடை மொழிகளுடன் ‌வெளிவந்திருக்கும் நர்த்தகி கதைப்படி, அவளுக்கென்று இவன், இவளுக்கென்று அவன்… என சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் உறவுமுறை குழந்தை ஜோடியில் உள்ள ஆண், பருவ வயதை எட்டிடும் தருவாயில் அவளாக மாறுகிறான்! அவளாக மாறிய அவன், அரவாணியாக கிளம்பியதால் ஊரின் ஏச்சு, பேச்சுகளுக்கு பயந்து குடும்பத்தில் ஏற்படும் இழப்புகளையும், அரவாணியாக படும் சிரமங்களையும்ல அவன் அவளானதால் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுவதையும், அதையே சாக்காக்கி, அதுவே கதி என்று கிடக்காமல், தான் விரும்பியபடி நல் உள்ளங்கள் சிலரால் நாட்டியக்காரி ஆவதும், நர்த்தகி ஆன பின்பும் நய வஞ்சகர்கள் சிலரால் ஏமாற்றப்படுவதும், அதன் பின்பும் புரட்சிப் பெண்ணாக புயலென புறப்பட்டு சாதிக்கும் யுவன்- யுவதியான ஒரு அரவாணியைப் பற்றியே பின்னப்பட்டிருக்கிறது நர்த்தகி படத்தின் மொத்த கதையும்!

சுப்புவாக வந்து, கல்கியாக மாறும் அஸ்வின் ஆண் – பெண் இருபால் பருவத்திலும் பிரமாதமாக நடித்திருக்கிறார். அவரது முறைப்பெண் மீனாவாக வரும் லீமா, காதல் காட்சிகளிலும் சரி… காதலனை பிரியும் காட்சிகளிலும் சரி… கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.

கல்கியாக கல்கி எனும் அரவாணி ஒருவரே அசத்தலாக நடித்திருக்கிறார். சோப்பு மாமா வி.கே.ஆர்.ரகு, பரதநாட்டிய குரு கிரி்ஷ், மதிவாணனாக வரும் விவின், சிலம்ப வாத்தியாராக சுப்புவின் அப்பாவாக வரும் கராத்தே வெங்கடேஷ், சுப்புவின் அம்மாவாக வரும் மைனா சூசன் உள்ளிட்ட அனைவரும் நர்த்தகிக்கு நன்மதிப்பையும், நம் மதிப்பையும் கூட்டும் வகையில் நடித்துள்ளனர்.

அவன் அவளானதும், மும்பை சென்று அரவாணிகளால் அரவாணியாக அறுத்துக் கொள்ளும் காட்சி ஒன்று போதும்… பெண் இயக்குனர் ஜி.விஜயபத்மாவின் துணிச்சலையும், டைரக்டர் டச்சையும் சொல்ல…! ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, கேசவனின் ஒளிப்பதிவு, ஜாக்குவார் தங்கத்தின் சண்டைப்பயிற்சி… இவையெல்லாம் நர்த்தகிக்கு மகுடம் சேர்க்கும் சமாச்சாரங்கள் என்றாலும், அரவாணிகளின் பாஷையிலேயே சில காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருப்பது பொதுஜனங்களுக்கு புரியா‌த போர் என்பது பலவீனம்.

மற்றபடி பெண் தயாரிப்பாளர் புன்னகைப்பூ கீதாவின் தயாரிப்பில் பெண் இயக்குனர் ஜி.விஜயபத்மாவின் எழுத்து, இயக்கத்தில் அரவாணிகளின் கதையை அநாகரீகமில்லாமல் சொல்லும் நர்த்தகி – நல் வித்தகி!