Archive for the ‘Nandhi Movie Review’ Category

நந்தி

தமிழ் சினிமாவின் வழக்கமான காதல் கதைகளில் இருந்து சற்றே வித்தியாசப்படுத்தப்பட் காதல்… அதுவும் கிராமத்து காதல் கதைதான் நந்தி திரைப்படத்தினுடையது. ஆனால் அதே வித்தியாசத்தை க்ளைமாக்ஸிலும் காட்டுகிறேன் பேர்வழி என சுபமாக முடிய வேண்டிய படத்தை சொதப்பலாக முடித்திருப்பது மட்டும் மைனஸ்!

கதைப்படி, எட்டாவது படித்து விட்டு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் அகிலுக்கு, பக்கத்து ஊர் பிரஸிடெண்ட் மகள் சனுஷா மீது காதல். அதுவும் தான் ஆசை ஆசையாய் வளர்க்கும் பசு மாட்டை அதன் பேறுகாலத்தில் தன் அப்பா தனக்கு தெரியாமல் பக்கத்து ஊர் பிரஸிடெண்டிடம் விற்றுவிட, அந்த மாட்டின் பிரிவை தாங்க முடியாமல் அடிக்கடி அவர் வீட்டுக்கு போக…. அகிலுக்கு அவரது மகள் சனுஷாவை பார்த்ததும் காதல் தீப்பற்றிக் கொள்கிறது. சனுஷாவிற்கும் அப்படியே! இவர்களது காதலுக்கு இரு வீட்டு பெற்றோர் சைடிலும் எதிர்ப்பில்லை., உற்றார், உறவினர் பக்கத்தில் எதிர்ப்பு இல்லை! ஆனால் உள்ளூரில் வேலை வெட்டி இல்லாமல் உதார் விட்டுக் கொண்டு திரியும் ஒரு இளைஞனாலும், அவரது சகாக்களாலும் எக்கச்சக்கமான எதிர்ப்பு வருகிறது. தங்களது காதலுக்கும் கல்யாணத்திற்கும் நந்தியாக இருக்கும் அந்த உதார் வில்லனை ஹீரோ அகில் ஒழித்துக் கட்டினாரா? அல்லது அவனால் இவர்களது காதல் அழிந்து போனதா என்பதை சொல்லுகிறது நந்தி படத்தின் மீதிக்கதை!

ஹீரோ வளர்க்கும் மாடு ஹீரோயின் வீட்டிற்கு விற்பனை, அதன் மூலம் காய்த்து குலுங்கும் காதல் என வம்சம் படத்தின் சாயலில் நந்தி படம் ஆரம்பமானாலும், அது தெரியாமல் அழகாக பூசி மெழுகி கதையை நகர்த்தி இருக்கும் இயக்குனர் தமிழ்வாணனுக்கு ஒரு சபாஷ் சொல்லியே தீர வேண்டும்!

மாவு மிஷின் டிரைவர் பழனியாக கல்லூரி அகில் கலக்கலாகவே நடித்து இருக்கிறார். நடிக்க தெரிந்த இளம் நடிகர்கள் வரிசையில் அகிலுக்கு ஓர் இடம் அவசியம் தரலாம்.

பிரஸிடெண்ட் மகள் கார்த்தியாக ரேணிகுண்டா சனுஷா, ரேகா, ரோகிணி, சங்கீதா வரிசையில் நல்ல நடிகையாக கூடிய வ‌ிரைவில் பெயர் எடுப்பார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார். அதுவும் காதலை அவர் அகிலிடம் வெளிப்படுத்தும் இடங்களிலும், அப்பாவிடம் மறைக்கும் இடங்களிலும் மனதை கொள்ளை கொள்வது அழகு!

சிங்கப்பூர் ரிட்டர்னாக சிங்கம்புலி, அகிலின் அப்பா சித்தன் கே.ஜி.யுடன் சேர்ந்து கொண்டு பண்ணும் அலப்பறை தியேட்டரில் ‌செவிப்பறையை கிழிக்கும் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. பேஷ, பேஷ்!

வில்லன் குணசிங்கமாக வெட்டி உதார் நிதிஷை, தமிழ் கிராமங்களில் தற்போதும் காண முடிகிறது என்பதால் நன்றாகவே ரசிக்க முடிகிறது! ஆனால் அவர் க்ளைமாக்ஸில் செய்யும் கொடூரம் எதிர்பாராதது. ஏனோ நெகட்டிவ் க்ளைமாக்ஸ் வேண்டுமென இயக்குனர் வலிய புகுத்தியதுபோன்று தெரிவதை டைரக்டர் தமிழ்வாணன் தவிர்த்திருக்கலாம்.

அம்மா இல்லாத வீடுகளில் அப்பாவுக்கும், பையனுக்குமான பாசத்தை அழகாக படம்பிடித்துக் காட்டி இருக்கும் இயக்குனர், கிராமத்து காதலையும் க்ளைமாக்ஸ் வரை மட்டும் அழகாகவே சொல்ல பரத்வாஜின் இசையும் எம்.பி.ரத்தீஷின் ஒளிப்பதிவும் படம் முழுக்க பக்க பலமாக இருப்பது நந்தி படத்தின் பெரிய ப்ளஸ்!

நந்தி – ஒரு முறை பார்க்கலாம் குந்தி!