மார்கண்டேயன்
Posted in Maarkandeyan Movie Review, latest tamil movie, tamil film review on 08/08/2011 06:33 pm by admin
பிரபல ஃபைட் மாஸ்டரும், முன்னாள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவருமான, ஃபெப்சி விஜயனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மார்கண்டேயன்”. விஜயனின் இயக்கத்தில், அவரது மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.
கதைப்படி, கெட்டவன் ஒருவன் தன் சுயலாபத்திற்காக தன்னிடம் சிறுவயதில் இருந்தே வளரும் இளைஞர்கள் சிலரை, சமூகத்தில் தாதாவாகவும், போலீசாகவும் வளர்த்துவிட்டு, அவர்கள் மூலம் அந்த ஏரியாவில் ஆடாத ஆட்டம் போடுகிறான். அவனிடமே
தாதாவாக வளரும் ஹீரோ, ஒரு கட்டத்தில் அந்த வில்லனை எதிர்க்க வேண்டிய சூழல்! காரணம் காதல்…! காதல் வென்றதா…? காட்டு மிராண்டிதனம் அதனை கொன்றதா…? என்பதை இருவேறு கோணங்களில், இருவேறு லொகேஷன்களில் லவ், சஸ்பென்ஸ், த்ரில், ஆக்ஷ்ன் உள்ளிட்டவைகளை கலந்துகட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
ஹீரோ சபரீஷ், கதைக்கேற்ற கச்சிதமான தேர்வு, அஜானுபாகுவான உயரம், உருவம், ஆக்ஷ்ன் காட்சிகளில் அதிரடியாக புகுந்து விளையாடி அப்பா பெயரை காபந்து செய்து விடுகிறார். நாயகி பிங்கி, மற்றொரு நாயகி நிவேதிதா இருவரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு. அந்தகாட்டு லொகேஷன்களில் சந்தானமும், இந்த வீட்டு லொகேஷன்களில் எம்.எஸ்.பாஸ்கரும் காமெடியில் கலக்கி இருக்கின்றனர்.

சின்ன விஷயத்திற்கு கூட டென்ஷன் ஆனால், எதிரில் இருப்பது நன்றியுள்ள நாயா…? நன்றி மறந்த மனிதனா…? என்று பார்க்காமல் ஒரே வெட்டில் சாகடிக்கும் கொடூர வில்லன் ஸ்ரீஹரி. ரொம்ப ஓவர்!
சசிகுமார், சாண்டோனியா இருவரது ஒளிப்பதிவும், சுந்தர்.சி.பாபுவின் இசையும், மார்கண்டேயனை இளமை குன்றாமல் வைத்து இருக்கின்றன என்றால் மிகையல்ல… இசையமைப்பாளர் சுந்தர்.சி.பாபுவின் பின்னணி இசை படத்தின் பெரிய பலம்!
மொத்தத்தில் ஃபெப்சி விஜயனின் இயக்கத்தில், “மார்கண்டேயன்”, அவரது “மகனைக்கண்டேன்” என்று கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.






