குமரா
Posted in Kumara Movie Review, latest tamil movie, tamil film review on 04/13/2011 01:21 pm by admin
புதுமுக நாயகர் ரதீஷ்வர்தனின் பாத்திரப் பெயரையே பட டைட்டிலாக கொண்டு வெளிவந்திருக்கும் படம்தான் “குமரா”.
நல்லாசிரியர் விருதுபெற்ற கந்தையாவுக்கும், தங்கை மகளால் கோடீஸ்வரராக வாழும் அருணாச்சலத்திற்கும் ஆரம்பகாலத்தொட்டே “மனிதநேய மாணவர் கல்லூரி” கட்டும் விவகாரம் தொடர்பாக பெரிய பகை! அந்த பகையையும், வருத்தத்தையும், ஊதிபெரிதாக்கும் விதமாக கந்தையாவின் மாணவர் குமரா கோடீஸ்வரர் அருணாச்சலத்தின் தங்கை மகள் ப்ரியாவை காதலித்து கரம்பிடிக்கிறார். இவர்களது காதலையும், கல்யாணத்தையும் எதிர்க்கும் அருணாச்சலம் வெற்றி பெற்றாரா? அல்லது இவர்களது காதல் கல்யாணத்தால் கந்தையா கல்லூரி கட்டி முடித்தாரா…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளித்திருக்கிறது “குமரா” படத்தின் மீதிக்கதை! அது விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் சொல்லப்படாதது மட்டுமே பெருங்குறை!!
நல்லாசிரியர் விருது பெற்ற கந்தையாவின் கல்லூரி அமைய உதவும் பழைய மாணவராகவும், நூறு கோடி சொத்துக்கு
அதிபதியான ப்ரியாவின் காதலராகவும் “குமரா” பாத்திரத்தில் புதுமுகம் ரதீஷ்வர்தன் ஆர்ப்பாட்டம் அலட்டல் இல்லாமல் அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் கத்திகுத்துப்பட்டும் அவர் அதை பொருட்படுத்தாமல் வில்லனின் ஆட்களை அடித்து துவைப்பதுதான் நம்பும்படியாக இல்லை!
நூறுகோடி சொத்துக்கு அதிபதியாக ப்ரியா பாத்திரத்தில் புதுமுகம் ரூபஸ்ரீ ஹோம்லியாக நடித்து சில குடும்பபாங்கு நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார்.கந்தையா ஆசிரியராக நிழல்கள்ரவி பிரமாதபடுத்தி இருக்கிறார். அதேபோல் நடிகர் சார்லியும் தன் பங்கிற்கு நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
வி.மகேந்திராவின் இசை, ரவீந்தரின் ஒளிப்பதிவு, டி.கே.சண்முக சுந்தரத்தின் எழுத்து இயக்கம் எல்லாமும் சேர்ந்து “குமரா”வை பழைய மொந்தையில் பழைய கள்ளாகவே தந்திருப்பதுதான் பலவீனம்!
மொத்தத்தில் “குமரா” – “அரோகரா!”






