குள்ளநரி கூட்டம்
Posted in Kullanari Koottam Movie Review, latest tamil movie, tamil film review on 04/13/2011 01:33 pm by admin
காதலுக்காவும், காதலிக்காவும் தடை பல கடந்து காவல் துறை அதிகாரியாக விரும்பும் இளைஞனையும், அவனது நண்பர்களையும் பற்றிய கதைதான் “குள்ளநரி கூட்டம்”.
கதைப்படி செல்போனில் வகையாக சிக்கும் விஷ்ணு மீது ரம்யா நம்பீசனுக்கு காதல். விஷ்ணுவுக்கும், ரம்யா மீது அதே
காதல் அடுத்தடுத்து சந்திப்புகளில் ஏற்படுகிறது. ஆனால் இவர்களது காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும் ரம்யாவின் போலீஸ் அப்பா ஒரு கண்டிஷன் போடுகிறார். அது விஷ்ணுவும் தன்னைப்போல் போலீஸ் அதிகாரியாக வந்தால்தான் கல்யாணம் எனும் கண்டீஷன் தான் அது. விஷ்ணுவின் வாத்தியார் அப்பாவுக்கோ, போலீஸை கண்டாலே சுத்தமாக ஒப்பாது…. எனும் நிலையில் எம்.பி.ஏ., படித்த விஷ்ணு போலீஸ் அதிகாரியாக முயற்சித்தாரா? காதலில் ஜெயித்தாரா…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பதில் சொல்கிறது குள்ளநரி கூட்டம் படத்தின் மீதிக்கதை!
ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஹீரோ எனும் பந்தா பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல் அமைதியாக நடித்து ரம்யாவை மட்டுமல்ல, ரசிகர்களையும் கவருகிறார் விஷ்ணு. காதலுக்காக அவர் அப்பாவிற்கு தெரியாமல் போலீஸ் செலக்ஷன் வரை போகும் காட்சிகள் பிரமாதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன பேஷ், பேஷ்!
நாயகி ரம்யா நம்பீசன் மாதிரி நமக்கும் ஒரு செல்போன் காதலி
கிடைக்கமாட்டாரா என காட்சிக்கு காட்சி ஏங்க வைக்கிறார் ரம்யா. விஷ்ணு -ரம்யா ஜோடிகளுக்கு இடையே இப்படத்தில் கெமிஸ்ட்ரி, ஹிஸ்டரி, ஜியாகரபி, பாட்டனி, சுவாலஜி, ஜியலாஜி என எல்லாம் பிரமாதமாக ஒர்க்-அவுட் ஆகியிருப்பது “குள்ளநரி கூட்டம்” படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்டுகளில் ஒன்று!
பரோட்டோ சூரி, அப்புக்குட்டி, சுந்தர், ரமேஷ் பாண்டியன், ஐயப்பன் என விஷ்ணுவுடன் “வெண்ணிலா கபடிக்குழு” வெற்றி படத்தில் பங்கெடுத்த நண்பர்கள் பட்டாளமே
இப்படத்திலும் பங்கு பெறுவது படத்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். அந்த போலீஸ் டிரெயினிங் நண்பர் பட்டாளங்களும் சரி, நாயகி ரம்யாவின் தோழி வசந்தியாக வரும் ப்ரியாமிதுன் குமார் உள்ளிட்டவர்களும் சரி படத்தில் பளிச் என்று பாத்திரமறிந்து நடித்திருக்கின்றனர். விஷ்ணுவின் அப்பா அம்மா கேரக்டர்களில் வரும் இயல் இளங்கோ, பாண்டியம்மாள், அண்ணன் அற்புதன் விஜய் உள்ளிட்டவர்களும் கூட படத்தின் பலம்!
ஆரம்பகாட்சிகளில் நாயகன் மதுரையிலும் நாயகி வேலுரிலும் இருந்து போனில் அடிக்கடி மொக்கை போடுவதை மட்டும் இயக்குநர் சற்றே தவிர்த்திருந்தால் “குள்ளநரி கூட்டம்” இன்னும் பெரிதாக இருந்திருக்கும். ஆனாலும் அவை கூட பின்பாதியில் சொல்லப்படும் அழுத்தமான கதை, காட்சிகள், போலீஸ் செலக்ஷன் குளறுபடிகள், அதற்குரிய அழகான தீர்வு உள்ளிட்ட சீரியஸ் காட்சிகளில் தெரியாமல் போவதுதான் குள்ளநரி கூட்டத்தின் மிகப்பெரிய ப்ளஸ்!
மொத்தத்தில் ஜெ.லஷ்மனின் அழகான ஒளிப்பதிவும், வி.செல்வ கணேஷின் இயல்பான இசையும்,, மு.காசி விஸ்வநாதனின் கச்சிதமான படத்தொகுப்பும், ஸ்ரீபாலாஜியின் எழுத்து இயக்கத்திற்கு பக்கதுணையாக இருந்து “குள்ளநரி கூட்ட”த்திற்கு ரசிகர் கூட்டத்தை சேர்ப்பது நிச்சயம்!”






