Archive for the ‘Endhiran Movie Review’ Category

எந்திரன் சிறப்பு விமர்சனம்

இதுவரை இந்திய படங்களுக்கு இல்லாத எதிர்ப்பார்ப்புடன் வந்திருக்கும் படம் எந்திரன். காரணம் இவர்கள் சேர்த்த மெகா கூட்டணி என்றால் கண்டிப்பாக மிகையல்ல.

ஷங்கரின் 10வருட கனவை ரஜினி எவ்வித குறையும் இல்லாமல் நிறைவேற்றியுள்ளார். இவ்வளவு பணம்போட்டு ஒரு மசாலா படம்தான் எடுக்கணுமான்னு கேள்வி கேட்கிறவர்களையும் இந்த மசாலாவை எடுக்கலாம்னு சொல்ல வச்சிருக்கார் ஷங்கர். பேருக்கு விஞ்ஞான படம் என்றிருந்தாலும் நம்ம ஊர் மசாலாவை சரியாகவே பயன்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார் ஷங்கர் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி தி பாஸ், இவர்தான் இத்தகைய எதிர்ப்பார்ப்பின் மையப்புள்ளி, இவரின்றி ஒரு அணுவும் அசைந்திருக்காது எந்திரனில். எந்திரனில் 3 வேடம் விஞ்ஞானி ரஜினியை தவிர மற்ற 2 ரஜினி கேரக்டர்கள் தூள் பரத்தி இருக்கிறார்கள், காதல் காட்சிகளில் அந்நியன் ரெமோ கொடுத்த பூரிப்பை தருகிறார் ரஜினி. ஐஸ்வர்யா ராய் மீது அவர் காதல் வயப்படுவதும் அவர் அதை விவரிப்பது அட அட அட.. இப்படி பல அட போட வைக்கிறார் ஷங்கர்.

கதை நாயகனாக நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி நடித்த ஒரு படம் இதுவாகத்தான் இருக்கும். படத்தில் 3 வது ஒரு ரோபோ இருக்கிறார், அவரை நாங்கள் அதிகம் சொல்லாமல் விட காரணம் அவரை நீங்கள் தியேட்டரில் அனுபவியுங்கள்… சிவாஜி மொட்டை பாஸ் தரும் உற்சாகத்தில் பல மடங்கு தருகிறார் இந்த ரோபோ…

படத்தின் நாயகி ஐஸ்வர்யாராய், சகல முகபாவங்களிலும் வெளுத்துக்கட்டுகிறார். இவருக்கு வயதாகிவிட்டது என்று இன்னும் 30 வருடத்துக்கு சொல்ல முடியாது. அதகளப்படுத்துகிறார் ஐஸ். அதும் சிட்டி தன் காதலை சொல்லியவுடன் அவரின் நடிப்பு அடுத்த பரிமாணம்.

படம் முழுக்க ரஜினியும் ஐஸ்வர்யா ராயுமே இருப்பதால் படத்தில் வில்லனுக்கு வேலை இல்லை என்றே சொல்லலாம். வந்து ஷங்கர் சொன்ன வேலையை செய்துவிட்டு சென்றிருக்கிறார் ஹாலிவுட் வில்லன் டானிக்.. படத்தில் கருணாஸும், சந்தானமும் எதற்கு என்றே தெரியவில்லை. சன்டீவி ஷக்சேனா புகழ் பாடியே இந்த வாய்ப்பை பெற்றிருப்பார் கருணாஸ். ஆனால் அதற்குரிய எந்த வேலையும் படத்தில் பெரிதாக இல்லை. ஹனீபாவும் கலாபவன் மணியும் ரசிக்க வைக்கிறார்கள். படத்தில் மற்ற பாத்திரங்கள் எதுமே மனதில் இல்லை. முழுக்க ரஜினி, ஐஸ் மட்டுமே…

ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் சூப்பர்ஸ்டார் ஷங்கர்தான், இதை யாராலும் மறுக்க முடியாது நிச்சயமாக இது ஒரு ஷங்கர் பாடம்தான், ஷங்கருக்குள் இருந்த அத்தனை கனவுகளையும் நனவாக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். நிச்சயமாய் இந்த வருடம் ஷங்கரை விருது கவுரவ படுத்தும். காரணம் இந்திய சினிமாவையே உலக சினிமா ஆக்கி இருக்கிறார் ஷங்கர். அவரின் உழைப்பு ஒவ்வொரு அசைவிலும் தெரிகிறது.

ஆரம்பத்தில் காமடியாக நகர்ந்த ஷங்கரின் திரைக்கதை இடைவேளையின் பின்னர் சூடுபிடிக்க தொடக்கி இறுதி காட்சிகளில் சரவெடியாக மாறி படத்தின் பெரும்பலமாக அமைந்தது. சுஜாதாவின் கதைக்கு உயிர்கொடுத்த ஷங்கர் சுஜாதாவின் வசங்களுடன் மதன்கார்க்கின் வசனங்களையும் தனது வசனங்களையும் படத்தின் தேவைக்கேற்றால்போல பயன்படுத்தியுள்ளார்.

சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள், கடைசியில் படம் முடியும்போது “சிந்தித்ததால்” எனவரும் ஒருவரி வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம். இந்த படத்தில் எல்லாமே இந்திய படங்களுக்கு புதுமைதான் இந்திய சினிமாவுக்கே க்ராபிக்ஸ் காட்சிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஷங்கர்.

இதுவரை இந்திய சினிமாவில் இப்படிப்பட்ட கிராபிக்ஸ் இல்லை. படு யதார்த்தமாக அமைந்திருக்கிறது க்ராபிக்ஸ் காட்சிகள். எது உண்மை எது க்ராபிக்ஸ் என்றே அறிய முடியாத வண்ணம் அருமையாய் செய்திருக்கிறார் ஷங்கர்.. இசை ஏற்கனவே பட்டி தொட்டி எல்லாம் பறக்கும் பாடல்கள், படத்திற்கான அதிகபட்ச ஒத்துழைப்பை ரஹ்மான் கொடுத்துவிட்டார். பிண்ணனி இசை படத்திற்கு பெரும் பலம்.

கேமரா ரத்னவேலு , வழக்கமாக ஷங்கர் படத்தில் கேமரா மேன் வேலை பார்ப்பதற்கு தொழிலை விட்டு விடலாம். அன்னியன் ப்டத்தில் குங்பூ பைட்டில் 360 டிகிரிக்கு கேமராவை கேட்டு கொடுமைப்படுத்தியவர் ஷங்கர், பாய்ஸ் படத்தில் ஸ்டில்ஸ் கேமராவை பயன்படுத்தி படம் எடுத்தவர், ரத்னவேலுவை விட்டுவிடுவாரா என்ன ?, காட்சி விறுவிறுப்பாக இருக்க பெரிது உதவி இருக்கிறது கேமரா, முக்கியமான விசயம் வயசான ரஜினியும், ஐஸூம் அழகாக தெரிய காரணம் இவர்தான் என்றால் இவருக்கு தனியாக விழாவே எடுக்கலாம்.

சாபுசிரில் ஷங்கருக்கு பக்க(கா) துணையாக இருந்திருக்கிறார்கள். 150 கோடியில் பிரமாண்டத்தை கொடுத்திருக்கிறார்கள். சாபுசிரிலின் உழைப்பு ஒரு மசாலா படமாக இருந்தாலும் வியப்பிற்குரியது. பீட்டர் ஹெய்ன் ஷங்கர் சொன்னதுபோல் பீட்டர் பெய்னாக இருந்திருக்கிறார், அலெக்ஸ் மார்டினை வைத்து இதுவரை இல்லாத அளவுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தில் வேலைபார்த்த இறுதி தொழிலாளி வரை அவர்களது சிறப்பான பணிக்காக பாராட்டை தெரிவிக்க வேண்டியது நம் கடமை. ரசிகர்களே இந்த படத்திலும் லாஜிக் இல்லாத காட்சிகள் உள்ளது, ஆனால் எந்திரனின் உருவத்திற்கு முன்பு அது வெறும் எள்ளளவுதான் என்று தோன்றுகிறது.