பாஸ் (எ) பாஸ்கரன்
Posted in Boss Enkira Baskaran Movie Review, latest tamil movie, tamil film review on 09/18/2010 01:01 pm by admin
பலமுறை பரீட்சை எழுதியும் டிகிரி பாஸ் பண்ண முடியாத ஹீரோ டூடோரியல் காலேஜ் அதிபர் ஆகி தான் விரும்பியவரை கரம் பிடிப்பதுதான் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ… அத்தனை அசத்தலாக சொல்லி காமெடியாகவும் கலக்கியிருக்கிறார்கள். சபாஷ்.
கதைப்படி, எந்த வேலையும் இல்லாமல் எந்நேரமும் பிஸியாக இருக்கும் ஆர்யா, ஆண்டாண்டு காலமாக தான் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை முடிக்க உடம்பு முழுக்க பிட்டுகளுடன் காலேஜூக்கு தேர்வு எழுதப் போகிறார். பஸ்ஸிலேயே இவர் பிட்ஸை பார்த்துவிடும் ட்ரைனிங் லக்சரர் நயன்தாராதான், இவரது தேர்வு எழுதும் அறைக்கு பொறுப்பாளர். விடுவாரா அம்மணி? அத்தனை பிட்களையும் பிடுங்கிக் கொண்டு ஆர்யா அடுத்த ஆண்டும் பெயிலாக காரணமாகிறார். இந்நிலையில் யதேச்சையாக ஆர்யாவின் அண்ணனிற்கும், நயன்தாராவின் அக்காவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, கல்யாணமும் நடக்கிறது. அதுமுதல் நயன்தாரா மீது காதல் கொள்ளும் வெட்டி ஆபீஸர் ஆர்யாவின் காதல் அங்கீகரிக்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை சிரிக்கவும், சிந்திக்கவும் சொல்லியிருக்கிறார்கள்.
வேலைவெட்டி இல்லாமல் ஊதாரித்தனமாக சலூனில் சிப்பும் கையுமாக திரியும் இளைஞர்களை அழகாக தன் பாஸ் என்கிற பாஸ்கரன் பாத்திரத்தின்மூலம் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஆர்யா. அவருக்கு நயன் மீது காதலும், பொறுப்பும் வந்ததும் வித்தியாசமாக வெற்றி பெற முயலுவதும் இயல்பு. சென்னை வாழ் ஆர்யாவை கும்பகோணத்து குமரனாக ஏற்றுக் கொள்வதிலும், பார்ப்பதிலும் சற்றே தயக்கம் இருந்தாலும் போகப் போக சரியாகி விடுகிறது. கொடுத்த கடனை திருப்பி வாங்க அவன் நடையா நடப்பான் என தெனாவட்டாக பேசும் ஆர்யாவாகட்டும், உடம்பு முழுக்க பிட்டுடன் பரீட்சை எழுத போவதிலாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் ஆர்யா, பாஸ்கரன் பாத்திரமாகவே பொருந்தி இருக்கிறார்.
இன்னொரு ஹீரோ என சொல்லும் அளவிற்கு காமெடி சந்தானமும் ஒரே ஒரு நண்பனை வைத்துக் கொண்டு படாத பாடுபடுவது செம காமெடி!
நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும் பாடும் செம டாப் டக்கர். ஆனால் உடம்பைதான் எடை குறைக்கிறேன் பேர்வழி எனஎலும்பும் தோலுமாக ஆக்கி வைத்துக் கொண்டு நம் கண்களில் குளிர்ச்சிக்கு பதில் கண்ணீரை வரவழைத்து விடுகிறார். ஆர்யாவின் அண்ணன் கால்நடை மருத்துவராக, கல்யாணம் பற்றி பேசினாலே கடுப்பாகும் கேரக்டரில் வரும் சுப்பு பஞ்சுவும், அவரது ஜோடி விஜயலட்சுமியும் கூட சூப்பர் பர்பார்மன்ஸ்.
யுவனின் இதமான இசை ஷக்தி சரவணனின் இனிமையான ஒளிப்பதிவு இவற்றின் உதவியுடன் காதலையும், காமெடியையும் கலந்து காக்டெயில் பார்ட்டி கொடுத்து கலக்கியிருக்கிறார் எம்.எஸ்.எஸ். இயக்குனர் ராஜேஷ் எம்.






