போடிநாயக்கனூர் கணேசன்
Posted in Bodinayakkanur Ganeshan Film Review, latest tamil movie, tamil film review on 08/08/2011 06:31 pm by admin
கருவாப்பையா… பாடல் புகழ் ஹீரோ, டான்ஸ் மாஸ்டர் ஹரிகுமார் நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொருபடம் “போடிநாயக்கனூர் கணேசன்”. சின்னவயது முதலே தன்னை அடிமைப்படுத்தி வந்த வில்லனை, ஹீரோ தன் மூளைவளர்ச்சி இல்லாத தம்பியுடன் முறியடிக்கும் கதை!
ஹீரோவாக “தூத்துக்குடி”, “திருத்தம்”, “மதுரை சம்பவம்” உள்ளிட்ட படங்களில் நாயகராக நடித்த டான்ஸ் மாஸ்டர் ஹரிக்குமார், முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் முன்னேறியுள்ளார். ஆட்டம், பாட்டம் இரண்டும் தான் அவருக்கு அத்துபடி என்று பார்த்தால்,
ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்துகிறார் இந்த ஆறடி ஆஜானுபாகு ஹீரோ! பேஷ் பேஷ்!!
கதாநாயகியாக அருந்ததி, முந்தைய படங்களைக் காட்டிலும் கலக்கி இருக்கிறார். பன்றி மேய்க்கத்தான் லாயக்கு என அப்பா சொன்னதால், சின்ன வயது முதல் அதையே தொழிலாக செய்து, உப தொழிலாக குத்து
வெட்டு கொலையையும், சாராயம், கஞ்சா கடத்துவதையும் செய்யும் வில்லன் சாய்ரவி, வில்லத்தனத்தில் உடன்பிறப்பையே மிஞ்சி, விஞ்சி விடுகிறார். காமெடியன் பராட்டா சூரிக்கு, “வெண்ணிலா கபடிக்குழு” படத்திற்கு பிறகு பேர் சொல்லும் காமெடி காட்சிகள் நிறைந்த படம்! ராஜா, பேபி அஸ்வின், அருள், குண்டுதனம், ஜானவி உள்ளிட்ட நட்சத்திரங்களும் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர்.
தேனி, கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளின் இயற்கை அழகை அள்ளி வந்து, நம் கண்களை அசத்தும் பிரபாகரின்
ஒளிப்பதிவும், ஜான் பீட்டரின் இதமான இசையும், ஓ.ஞானத்தின் எழுத்து இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன.
வில்லன் சாய்ரவியின் அட்டகாசங்களை கடைசி வரை போலீஸ் கண்டு கொள்ளாதது, ஹீரோவுக்கு வலிப்பு உள்ளிட்ட போர் சமாச்சாரங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் “போடிநாயக்கனூர் கணேசனுக்கு” – “எல்லாதரப்பிலும் உண்டு ரசிகன்!”






