Archive for the ‘Bhavani Movie Review’ Category

பவானி

பல வருடங்களுக்கு முன் விஜயசாந்திக்கு ஆக்ஷன் ராணி பட்டம் பெற்றுத் தந்த படம் வைஜயந்தி ஐபிஎஸ். அதே படத்தை ரீ-மேக் செய்து புன்னகை இளவரசி சினேகாவை ஆக்ஷன் இளவரசி ஆக்கி இருக்கின்றனர் பவானி படத்தில் என்பதுதான் ஹைலைட்.

ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு டிரான்ஸ்பர் ஆகும் நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரி சினேகா. அவருக்கு தொல்லை தரும் பொலிட்டிக்கல் தாதா கோட்டா சீனிவாசராவ். காவல், சட்டம், அமைச்சர், அரசியல் என சகலத்தையும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என கொடிகட்டி பறக்கும் கோட்டாவின் கோட்டையை சீன்சியர் போலீஸ் ஆபீசரான சினேகா எப்படி தகர்க்கிறார்? அதற்காக பதவி உள்ளிட்ட எதையெல்லாம் இழக்கிறார்? என்பதுதான் பவானி படத்தின் மொத்த கதையும்!

ஐ.பி.எஸ். ஆபீசர் பவானியாக சினேகா ஆக்ஷனில் தூள் பரத்தியிருக்கிறார் என்றாலும், சினேகாவின் மென்மையான உடம்பும், புன்னகை முகமும் ஆக்ஷனில் விஜயசாந்தியை பண்ண விடாமல் தடுத்து விடுகின்றன. பாவம்! ஆனாலும் சினேகாவின் முறைப்பும், விரைப்பும் விணாகாமல் ஆக்ஷன் ராணி பட்டத்தை விஜயசாந்தியிடம் இருந்து தட்டிப்பறிக்க விடவில்லையே ஒழிய, ஆக்ஷன் இளவரசி என்ற பட்டத்தை பெற்றுத் தந்துள்ளதென்றால் மிகையல்ல!

படத்தில் வில்லன், ஹீரோ எல்லாம் அரசியல் தாதா கோட்டா சீனிவாசராவ் தான். மனிதர் என்னமாய் அசத்தியிருக்கிறார். வாவச! முள்ளைமலர் மேனி ரீ-மிக்ஸ் பாடலில் இவர் காட்டும் முகபாவங்கள், மேனரிஸங்கள்… கோட்டாவை வில்லனாக மட்டுமல்ல… ஹீரோவாகவும் தூக்கி நிறுத்துகின்றன என்றே சொல்ல வேண்டும். அத்தனை வயதிலும் எத்தனை நடிப்பு இந்த ஆந்திர பார்ட்டிக்கு?! அமைச்சர் ஜி.ஆர்., இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம், வக்கீல் ராஜ்கபூர் என எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் மனிதர்! விவேகமான நடிகரின் காமெடி – கடி! இதுதான் படத்தின் பெரும் பலவீனம்!

தினாவின் இசையும், எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவும், ஜி.கிச்சாவின் இயக்கத்தில் ஏற்கனவே பார்த்த கதை என்றாலும், பவானியை புதிதாக காட்ட முயற்சித்திருக்கின்றன.

ஆக மொத்தத்தில் பவானி – பரவாயில்லை நீ எனலாம்!