போராளி

“நாடோடிகள்” வெற்றி கூட்டணி எம்.சசிகுமாரும், பி.சமுத்திர கனியும் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் “போராளி!”

கதைப்படி, ஹீரோ சசிகுமாரையும், செகண்ட் ஹீரோ நரேஷையும் கும்மிருட்டில், கொட்டும் மழையில், கொலை வெறியோடு மூர்க்கத்தனமாக ஒருத்தர் துரத்த, அவரிடமிருந்து ஒருவழியாக தப்பி பிழைக்கும் இருவரும் சென்னையில், பொய் வேஷம் போட்டு பிழைப்பு நடத்தும் கிராமத்து நண்பன் கஞ்சா கருப்பு, தங்கியிருக்கும் அறைக்கு அடைக்கலம் தேடி வருகின்றனர். அங்கு கருப்பு மட்டுமல்ல, அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் மற்றவர்களும், இவர்கள் இருவருக்கும் அடைக்கலம் தர மறுக்க, ஹவுஸ் ஓனர், பேராசிரியர் ஞானசம்பந்தம் மட்டும் தீர்ப்பு நான் தான் சொல்வேன்… என்று, இருவரது முகத்திலும் ஒளி தெரிவதாக சொல்லி, கருப்புவின் அறையில் இவர்களை சேர்த்துக்கொள்ள சொல்வதுடன் சசிக்கு, தன்மகளையும் கட்டி தரும் முடிவில் இறங்குகிறார்.

இதுஒருபுறம் இருக்க, சிட்டிக்கு வந்த இருவரும் ஞானவேல் அண்ணாச்சியின் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து கொண்டே, பார்ட் டைமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, அதில் பல பேருக்கு வேலை வாங்கி தருகின்றனர். இதைப்பார்த்து இவர்களது வீட்டின் அருகில் சினிமா டான்ஸராக இருக்கும் ஹீரோயின் சுவாதிக்கு-சசிக்குமார் மீதும், பெட்ரோல் பங்கில் உடன் வேலைபார்க்கும் நிவேதாவிற்கு-நரேஷ் மீதும் காதல் கண்ணை மூடிக்கொண்டி வருகிறது. இப்படி தாங்களும் வளர்ந்து சைடில் இருப்பவர்களையும் வாழவைக்கும் சசிகுமார், நரேஷ் இருவர் மீதும் பைத்தியார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த பைத்தியங்கள்… எனும் குற்றச்சாட்டு இண்டரவெல்லுக்கு முன் இடியென வந்து விழ, அவர்களை தேடிவந்த கிராமத்து ஆசாமிகளுடன் கிளம்பினார்களா…? இல்லை, தாங்கள் பைத்தியம் இல்லை என்பதை நிரூபித்து, தாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார்களா…? என்பது போராளி படத்தின் போராட்டமான மீதிக்கதை!

சிலோன் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது, இவளுக்கு சிலோன் பரோட்டா வேண்டுமாம் என்பது உள்ளிட்ட டச்சிங் டயலாக் பேசியபடி இளங்குமரனாக வரும் சசிகுமார், முன்பாதியில் ஃபிரேம் டூ ஃபிரேம் தான் செம மூளைக்காரர் என்பதை நிரூபித்திருக்கிறார். பின்பாதியில் உறவுகளால் ‌பைத்தியம் ஆக்கப்பட்டதாலோ என்னவோ சற்றே சித்த பிரமை பிடித்தவர் போன்றே தெரிவது மைனஸ்! சசிகுமாரின் முன்பாதி துருதுறுப்பும், சுறுசுறுப்பும் பின்பாதியில் இல்லாமல் இருப்பது படத்தையும் ஸ்லோவாக்கி விடுவதை இயக்குநர் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!

குறும்பு நரேஷ், அல்லாரி நரேஷாக தெலுங்கில் செம பிரபலம் என்றால், தமிழில் குறும்பு படத்திற்குப்பின் மீண்டும் இப்பொழுது தான் வந்திருக்கிறார். சுயநிலை இழக்கும் இடங்களில் நடிப்பில் மனுஷன் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

சுவாதி, நிவேதா, வசுந்த்ரா மூவருமே முக்கிய பங்காற்றும் நாயகி என்றாலும், மூவரில் பின்பாதியில் ஆட்டுக்கார அலமேலு… எனும் ரீதியில் ஈட்டி, கம்பும் கையுமாக வீராவேசமாக வரும் வசுந்த்ரா பிரமாதம். கஞ்சா கருப்பு, பரோட்டா சூரி, ஜெயபிரகாஷ், ஞானசம்பந்தாம், ஞானவேல், நமோ நாராயணன் உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

சுந்தர்.சி.பாபுவின் அதிரடி இசை, எஸ்.ஆர்.கதிரின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் இயக்குநர் பி.சமுத்திரகனி, போராளி படத்தில் நிறையவே போராடி இருப்பது தெரிகிறது. அதற்கான வெற்றி எவ்வளவு என்பது ரசிகர்களின் தீர்ப்பிலேயே இருக்கிறது.

போராளி – புத்திசாலி! அதிர்ஷ்டசாலியா…?!

Tags: , , , , , , , , , , , , ,  

Leave a Reply

Comments are closed.