தம்பி வெட்டோத்தி சுந்தரம்
Posted in Thambi Vettothi Sundaram Movie Review, latest tamil movie, tamil film review on 12/04/2011 05:01 pm by admin
தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாகவும், கதைக்களமாகவும் கொண்டு வெளிவந்திருக்கும் படம் தான் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்!”
தமிழகத்திலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் நிரம்பிய கன்னியாகுமரி
மாவட்டத்தில்தான் ரவுடிகளும், தாதாக்களும் கூட அதிகமாம். அது ஏன்? அதற்கு காரணம் என்ன…? என்பதை அலசியிருக்கும் இப்படத்தின் கதைப்படி, வெட்டோத்தி எனும் குமரி மாவட்ட, கிராமத்தை சார்ந்த படித்த இளைஞன் சுந்தரம் எனும் கரண், தகுதி இருந்தும் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காததால் குடும்பசூழல் காரணமாக கடத்தலில் இறங்குகிறார். கூடவே குமரி மாவட்டத்திலேயே பெரிய கடத்தல் பார்ட்டியும், கள்ளச்சாரய வியாபாரி தாதாவுமான, சிலுவையின் மகள் லூர்து எனும் அஞ்சலியையும் காதலிக்கிறார். கரணின் கடத்தல், காதல் இரண்டும் அவரை சோதித்ததா…? இல்லை சாதிக்க செய்ததா…? என்பது வெட்டோத்தி சுந்தரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!
வெட்டோத்தி சுந்தரமான கரண்-பிரமாதம். வாத்தியார் வேலைக்கு படித்துவிட்டு, போலீஸ் வேலைக்கு முயற்சித்து, இரண்டும் கைகூடாமல் கடத்தலில் இறங்கும் கரண், நண்பர் சரவணனுக்காக உயிரையும் கொடுக்க துணிவது ஓ.கே., அதே நேரம் சரவணனால், தன் கல்யாணத்தில் முடிய வேண்டிய காதல், கலாட்டாவில் முடிவதை பொறுத்துக்கொள்வதெல்லாம் ரொம்பவும் ஓவர். என்னதான் உண்மை சம்பவம் என்றாலும் கரண், க்ளைமாக்ஸில் வில்லன்களால் வீழ்த்தப்பட்டு, கண்தெரியாமல் போய், கஷ்டப்பட்டு உயிரை விடுவது உருகாதோர் நெஞ்சையும் உருக வைத்துவிடும் உணர்ச்சிமிகு காட்சிகள். அதில் கரணைத்தவிர வேறு ஒரு நடிகரால் இவ்வளவு உருக்கமாக நடிக்க முடியுமா…? என்பது கேள்விக்குறியே!
துருதுரு லூர்துவாக அஞ்சலி, செம ஜாலி பேர்வழி! மரமண்டை, மரமண்டை என கரனை திட்டிக் கொண்டே தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் அஞ்சலி, பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். அதேநேரம், டைரக்ஷ்ன் டச்சாக அஞ்சலியின் துறுதுறுப்பும், பரபரப்புமே கரணுக்கு வினையாய் வந்து முடிவது வேதனை! வேலையில்லா திண்டாட்டம், அதனால் “சிட்டிசன்” சரவணன் சுப்பையா, குடித்துவிட்டு பண்ணும் கலாட்டா மற்றும் தற்கொலை டிராமாக்கள் உள்ளிட்டவைகளை தவிர்த்திருந்தால் இயக்குநரை இன்னும் அதிகமாக பாராட்டலாம்!
சாலை எனும் பாத்திரத்தில் சரவணனும், அவரது கூட்டாளி ஆப்பையாக வரும் சுப்புராஜூம் காமெடிக்கு, காமெடியும் செய்து நட்புக்காக உருகவும் செய்கிறார்கள். கரண்ட் கஞ்சா கருப்பு, சிலுவை ஜே.எஸ்.பாலாசிங், சண்முகராஜன், போ
லீஸ் வில்லன் நந்தா சரவணன் உள்ளிட்ட எல்லோருமே பாத்திரமறிந்து நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர். பேஷ்! பேஷ்!!
அழகிய ஆஞ்சமநாயலுவின் ஒளிப்பதிவும், வித்யாசாகரின் மெலோடி பாடல்களும், வி.சி.வடிவுடையானின் எழுத்து, இயக்கத்தில் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படத்தை “அண்ணன் அழகு சுந்தரமாக” ஜொலிக்க செய்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!






