வாகை சூட வா

களவாணி வெற்றிபட இயக்குநர் ஏ.சற்குணத்தின் மற்‌றுமொரு காந்தர்வ காதல் படைப்பு “வாகைசூட வா”! இதில் காதலுடன் செங்கல்சூளை அடிமைத்தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகளும் தொழிலாளர்களாக அடிமைகளாக வாழ்ந்த அவலம், அவர்களுக்கான கல்வி என 1966ம் ஆண்டுகளில் வாழ்ந்த கொத்தடிமை தனங்களையும், குழந்தை தொழிலாளர் அவலங்களையும் தோலுரித்து காட்டியிருப்பது தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத புதுமை!

கதைப்படி, தன் மகனுக்காவது அரசாங்கத்தில் உத்தியோகம் வாங்கி விட வேண்டுமென்பது, படித்துவிட்டு பத்திரம் எழுதும் வேலைபார்க்கும் பாக்யராஜின் வைராக்கியம். அதற்காக மகன் விமலை டீச்சர் டிரையினிங் படிக்க வைத்து காத்திருக்கிறார். அரசாங்க உத்தியோகத்திற்கு முன்னதாக தனியார் கிராமசேவா திட்டத்தின் கீழ் விமலுக்கு, கண்டெடுத்தான் காடு எனும் பொட்டல் காட்டில் வாத்தியர் உத்தியோகம் கிடைக்கிறது. அரசாங்க வேலை கிடைக்கும் வரை அந்த உத்தியோகத்தை பார்க்கலாம் என பொட்டி படுக்கையுடன் புதுக்கோட்டையிலிருந்து புறப்படும் விமலுக்கு, அந்த பொட்டல் காட்டில் எக்கச்சக்க ஆச்சர்யங்களும், அதிசயங்களும், அதிர்ச்சிகளும் காத்திருக்கின்றன. அவற்‌றை‌யெல்லாம் முறியடித்து விமல் எவ்வாறு…? அந்த பொட்டல் காட்டு கிராமத்து சிறுவர்களுக்கு பாடம் சொல்லி தருகிறார் என்பதுதான் “வாகைசூட வா” படத்தின் மொத்த கதையும். இதனூடே அக்கிராமத்தில் டீக்கடை நடத்தி, விமலுக்கு சமைத்தும் போடும் நாயகி இனியாவுடனான காதலையும் கலந்து கட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர். பலே, பலே..!!

தேங்காய் எண்ணெய் தேய்த்துபடி வாரிய தலைமுடி, மழுங்க ஷேவ் செய்த வழுவழு முகம், அதில் வரைந்த கோடு மாதிரியான மீசை, லூஸ் பிட்டிங்கில் ஃபேண்ட், சர்ட் என 1966-களில் வாத்தியாராக வாழ்ந்த இளைஞர்களை நம் கண்முன் நிறுத்த நிறையவே ஹோம் ஒர்க் செய்திருப்பார் போலும் விமல். அதனால், படத்தில் அப்பாத்திரமாகவே ஜொலிக்கிறார் மனிதர். அக்கிராமத்து மக்களிடமும், குழந்தை தொழிலாளிகளான மாணவர்களிடமும், குறிப்பாக கதாநாயகியிடமும் விமல் படும்பாடு நிறைய காமெடி, கொஞ்சமே கொஞ்சம் காமநெடி, என்பதும் கூட படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. விமலுக்கு விருதுகள் நிச்சயம்.

கதாநாயகி இனியா, நடிப்பில் கைதேர்ந்த நடிகைகளையே மிஞ்சும் வகையில் விஞ்சி நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காசு, காசு என அலைந்து விமலுக்கு சாப்பிட களியையும், கருவாட்டையும் வைத்து ஏமாற்றுவதும், அவர் மீது காதல் வந்தபின்பு காசு பணத்தை பார்க்காமல், கறியும் சோறுமாக ஆக்கிபோடுவதுமாக படம் முழுக்க காதல் மொழி பேசி கலக்கி இருக்கிறார். சில இடங்களில் கண்ணீர் விடவும் வைக்கிறார் பேஷ், பேஷ்!

மகனை அரசாங்க உத்தியோகத்தில் அமர்த்தியே ஆகவேண்டும் என வைராக்கியத்தில் வாழும் பாக்யராஜ், எடக்கு-மடக்காக ஏதாவது கணக்கு போட்டு தன்னை புத்திசாலியாக காட்டிக் கொள்ள முயலும் டூ-போர் ஏட்டு தம்பி ராமையா, ஆண்ட முதலாளி பொன்வண்ணன், அக்கிராமத்தில் செங்கல் மண்ணை கண்டுபிடித்து தன் உறவுகளை வாழவைத்து, பின் மனநோயாளி ஆகி மறையும் குருவிக்காரர் குமரவேல், வைத்தியர் நம்பிராஜன், மகளை விமலிடம் அழைத்து போய் ஒப்படைத்து, இவளுக்கு ஏதாவது சொல்லி கொடு என கதறும் பெண், பொட்டல்காட்டில் சத்தம் போட்டபடி உலாவரும் வெள்ளாந்தி சிறுவர்கள், பச்சைபசேலே தெரியாத பொட்டல் காடு, செம்மண் புழுதி பறக்கும் செங்கல்சூளை என 1966 காலகட்டத்தை படத்தில் கொண்டு வர இயக்குநருக்கு ரொம்பவே உதவி இருக்கிறார்கள் கலை இயக்குநர் சீனு, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகிய மூவரும். படத்தில் இந்த மூவரின் பங்கு பெரும்பாங்கு என்றே சொல்லலாம்.

இயக்குநர் ஏ.சற்குணத்தின் எழுத்து-இயக்கத்தில் பின்பாதியில் இருக்கும் வித்தியாசமும், விறுவிறுப்பும் முன்பாதியில் இருந்திருந்தால்,  “வாகைசூட வா” மேலும் ரசிகர்கள் மனதில் குடிகொண்டிருக்கும் என்றாலும், “வாகைசூட வா” “விருதுகளே ஓடிவா” என அறைகூவல் விடுத்திருக்கும் தரமான தமிழ்படம்.

Tags: , , , , , , , , , , , , ,  

Leave a Reply

Comments are closed.