நான் மகான் அல்ல

தனது முதல் படம் வெண்ணிலா கபடிக்குழு படத்தை முற்றிலும் கிராம சூழலில் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் சுசீந்திரன், தனது இரண்டாவது படத்தை முற்றிலும் சென்னை நகர பின்னணியில் எடுத்திருக்கிறார். ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் க்ளொட் நைஜ் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி வழங்கும் படம் நான் மகான் அல்ல.

வேலையில்லாத இளைஞன் ஜீவா (கார்த்தி), சிநேகிதியின் திருமணத்தில் வசதியான குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ப்ரியாவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறான். கண்டதும் காதல். பாசமுள்ள குடும்பத்தை சேர்ந்த கார்த்தியின் தந்தை ஜெயபிரகாஷ், ஒரு கால்டாக்ஸி டிரைவர். நகரில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணை தன் வண்டியில் ஏற்றிச் சென்றதை இவர் நினைவில் வைத்ததால் தொடரும் பிரச்னைகள். கொலைகார கும்பல் இவர் மீது காரை ஏற்றி கொ‌ல்ல முயற்சிக்கிறது. அதில் தப்பிப் பிழைக்கும் ‌ஜெயபிரகாஷை கத்தியால் குத்தி சாகடிக்கிறது அந்த கும்பல். தனக்கு தெரிந்த தாதா உதவியுடன் அவர்களை தேடும் கார்த்தி, இறுதியில் தனியே அவர்களை பழிவாங்குகிறார்.

மிகவும் இயல்பாக எந்த செயற்கைத்தனமும் இன்றி கார்த்தி, ஜீவாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். மயக்கும் புன்முறுவல், நினைத்ததை பேசும் சுபாவத்துடன் நம்மை மகிழ்விக்கிறார். இவரது திறமையில் நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்ட வேண்டும். பல காட்சியில் கார்த்தி நம்மை சிரிக்க வைக்கிறார். ப்ரியாவை தனக்கு போனில் பேச வைக்கும் தந்திரம், முதல் சந்திப்பிலேயே ப்ரியாவின் காதலை பெறுவது, கார்த்தியை காதல் விவகாரத்தில் மிரட்டி வைக்க ப்ரியா‌வின் தந்தை வரவழைக்கும் லோக்கல் தாதா குட்டி நடேசனிடம் இயல்பாக ‌பேசி, அவரையே காதலுக்கு சிபாரிசு செய்ய வைப்பது, தனியார் வங்கியின் கடன் வசூலிக்கும் ஏஜென்டாக சென்று, பல வாடிக்கையாளர்களிடம் சென்டிமெண்ட்டாக ஏமாறுவது, இரண்டாவது பாதியில் கொலைகார கும்பல் தேடுவது என எல்லா காட்சிகளிம் கார்த்தி இஸ் குட். தொடர்ந்து இதே ஸ்பீடில் சென்றால் மற்ற ஹீரோக்கள் உஷாராக இனி இருக்க வேண்டிவரும். வெல்டன் கார்த்தி.

அழகாக வந்து காதலிக்கிறார் காஜல்அகர்வால். அவர் படத்தின் இரண்டாம் பாதியில் காணாமல் போவது சற்று வருத்தமே.

கார்த்தியின் சிநேகிதி சுதாவாக நீலிமா, தந்தையாக ‌ஜெயபிரகாஷ், தனியார் வங்கி தோழராக சூரி, தாயாக லட்சுமி ராமகிருஷ்ணன் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். கார்த்தியும், காஜலும் அறிமுகமாகும் நிலவைப் பிடிச்சு என்ற பாடல், இறகைப் போல என்ற காதல் டூயல் பாடல் ஆகியவை யுவன் சங்கர் ராஜாவுக்கு பெயர் சேர்க்கும். கார்த்தியை வேலையை விட்டு தூக்கும் வங்கி அதிகாரியை கார்த்தியும், சூரியும் சமாளிக்கும் விதமும், மீண்டும் பணியில் சேருவதும் சுவாரசிய காட்‌சிகள்.

எந்த முன்விரோதமும் இன்றி, இரு பெண்களை கற்பழித்து கொன்று உடலை வெட்டி, பாகம் பாகமாக தூக்கி எறியும் கும்பல், போலீசில் அகப்பட்டுக் கொள்வோமோ என்று திட்டம் போட்டு கார்த்தியின் தந்தையை கொல்வது, இறுதியில் கார்த்தியையும் தீர்த்துக்கட்ட முயற்சிப்பது என எல்லாமே யதார்த்தமாக, விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவர்கள், இப்படி செய்வார்களா? என்ற கேள்வியும் எழுகிறது. நகர வாழ்க்கையின் யதார்த்த அவலமா இது? ஹீரோவின் ஹீரோயிஸம் காட்ட, தமிழக போலீசை இப்படி செயல்படாதவர்களாக ஆக்கியிருப்பதும் நெருடல்.

மதியின் காமிரா சிறப்பாக இயங்கியிருக்கிறது. பாஸ்கர் சக்தியின் வசனங்கள் பல இடங்களில் பளிச். சுசீந்திரன் – கார்த்தி கூட்டணி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.

நான் மகான் அல்ல : முதல் பாலி மென்மையான கவிதை ; இரண்டாம் பாதி வன்முறை ‌ஓவர் டோஸ்!

 

நீயும் நானும்

இரு பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் டான்ஸ் போட்டியை (பரிசு பத்து லட்சம் ரூபாய்) மையமாக இளைஞர்களை குறியாக வைத்து இயக்குனர் எஸ்.வி.சோலைராஜா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் வித்தியாசமான படம் நீயும் நானும். காதல், காமெடி, தாய் சென்டிமெண்ட் இவற்றுடன் கலந்து சுவையான படமாக அளித்திருக்கிறார்.

படத்தில் மூன்று அறிமுக காட்சிகள். மூன்றுமே வித்தியாசமாக மனதில் பதியும்படி படமாக்கியிருக்கிறார்கள். இளைஞர் பட்டாளத்துடன் பெங்களூர் நகர வீதிகளில் மாடர்ன் டான்ஸ் ஆடி உற்சாகத்துடன் படத்தின் ஹீரோ சஞ்சீவ் நல்ல பாடல் காட்சியுடன் அறிமுகமாகிறார்.

எம்.பி.,யின் மகனுக்கு தன் கல்லூரியில் சீட் தர மறுக்கிறார் கல்லூரி அதிபர் சம்பத்குமார். பல டிவி சேனல்கள், மீடியா பார்வையில் கோபமடைந்த எம்.பி.,  சம்பத்குமாரை கன்னத்தில் அடிக்கிறார். ஒரு கோடி ரூபாய் ‌கொடுத்தாலும் இந்த பப்ளிசிட்டி கிடைக்காது. எல்லா சேனல்களிலும் இதை திரும்பி திரும்பி போடுவாங்க. கல்லூரி நிறுவனம் நேர்மையானது என நமக்கு பெயர் கிடைக்கும், என்று பார்க்கும் சம்பத்குமார், கல்லூரி சேர்மனாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் அறிமுகமாகியிருக்கிறார்.

சம்பத்குமார் பள்ளிக்கு புது டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகும் ஹீரோ சஞ்சீவ் ‌வீட்டிற்கு பேப்பர், உணவு விடுதி, சலவைக்காரர் என்று பலர் வருகிறார்கள். அனுப்பியவர் கார்த்திக் என்கிறார்கள். கார்த்திக் பத்து வயது ஏழை சிறுவன். ஸ்மார்ட்டாக இருக்கும் பலருக்கும் உதவிகள் செய்யும் கார்த்திக், அட்டகாச அறிமுகம்.

கல்குவாரியில் கல் உடைக்கும் பெண்ணின் மகனான கார்த்திக்கின் மீது அக்கரை கொண்டு, தான் பணிபுரியும் பள்ளியில் சேர்க்கிறார் ஹீரோ சஞ்சீவ். கல்லூரி அதிபர் சம்பத்தின் மகன் சித்தார்த் (மாஸ்டர் சச்சின்) டான்ஸ் போட்டிக்கு தயாராகிறான். தன் தாயின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும் கார்த்திக், டான்ஸ் போட்டியில் சேர விரும்புகிறான். முறைப்படி பயிற்சி இல்லாமல் இருந்தும், யதார்த்தமாக வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களின் ரிதம், அசைவுகளை வைத்து டான்ஸ் மூவ்மெண்ட்களாக ஆக்கி, டான்ஸ் மாஸ்டரை இம்ப்ரஸ் செய்கிறான் கார்த்திக். இதனால் சித்தார்த்துக்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்கிறார் சஞ்சீவ். தன் மகன் சித்தார்த்திற்கு பதிலாக கார்த்திக்கை செலக்ட் செய்தது கல்லூரி அதிபருக்கு பிடிக்கவில்லை. டான்ஸ் மாஸ்டர் பதவியில் இருந்து சஞ்சீவ் விலக நேரிடுகிறது. இருந்தாலும் கார்த்திக்கிற்கு உதவி செய்ய நொச்சிக்குப்பத்தி்ல உள்ள சாதாரண பள்ளியில் இருந்து 8 சிறுவர் சிறுமியரை சேர்த்து (நிறைய சிரமப்பட்டு) அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். பல தடங்கல்களுக்கு பிறகு இறுதிபோட்டியில் நொச்சிக்குப்பம் அணி, எஸ்.எம்.ஆர். பள்ளி அணியை வெற்றி கொள்கிறது. தன் பள்ளி அணி தோற்றாலும், கல்லூரி அதிபர் நொச்சிகுப்பம் பள்ளிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறார்.

சஞ்சீவ் நடனக் காட்சிகளில் புயலாக ஆடுகிறார். கல்லூரி அதிபர் வீட்டில் வளரும் டான்ஸ் கலைஞர் தியாவை (நடிகை சேதனா) துடிப்போடு காதலிக்கிறார். ரொம்ப ரொம்ப ரொம்ப காதல் என்று இருவர் சொல்லுவதும், கொஞ்சுவதும் ரசிக்கும்படி இருக்கிறது. சஞ்சீவ் குப்பத்தில் பல வீடுகளுக்கு சென்று டான்ஸ் ஆட அழைத்து வருவதும், அவர்களுக்கு டான்ஸ் ஒத்திகை நடத்துவதும் கல கல.

ஒரே காட்சியில் வரும் பஸ் கண்டக்டராக வந்து முத்துக்காளை அசத்துகிறார். நெல்லை சிவா, சிங்கமுத்து ஆகியோரின் புதுமையான நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு ப்ளஸ்.  கல்குவாரியில் கல் உடைக்கும் தொழிலாளியான கார்த்திக்கின் அம்மா, கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போல க்ரே கலரில் முழுக்கை ரவிக்கையும், புதிய சேலையும் எதற்காக அணிகிறார் என்பதும், டான்ஸ் மாஸ்டராக இருந்த சஞ்சீவ் பள்ளியை விட்டுச் சென்றதற்காக ஆப்ரிக்கர் ஒருவரை டான்ஸ் மாஸ்டராக அவசரமாக பணியில் சேர்ப்பதும் ஏன் என்பது புரியவில்லை.

சிறுவன் கார்த்திக் மீது மிகுந்த அக்கரை எடுத்து, அவனுக்கு நல்ல ஊக்கம், பயிற்சி அளிக்கும் உடலில் குறைபாடு உள்ள டான்ஸர் பாத்திரத்தில் வருபவர் நன்றாக டான்ஸ் ஆடி, நடத்து, நம்மை வியக்க வைக்கிறார். வாழ்க்கையில் உங்களுக்கு எது வருத்தம் அளிக்கிறது? என்பதற்கு, நமது தேசியகீதம் ஒலிக்கப்படும்போது என்னால் எழுந்து நின்று தேசியக்கொடிக்கு மரியாதை செய்ய முடியவில்லையே என்பதுதான் என்னுடைய ஒரே வருத்தம் என்று சொல்வது… நம் மனதை தொடுகிறது. கைத்தட்டல் பெறுகிறது.

கார்த்தி‌க்காக வரும் மாஸ்டர் ரின்சன் படம் முழுவதும் சிறப்பாக செய்கிறார். குட் டேலண்ட். சம்பத்குமாரின் ‌மனைவியாக நீண்ட நாள் கழித்து நடிகை அஞ்சு வருகிறார். டான்ஸ், இசை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்திருக்கும் ஸ்ரீராம் விஜய், நடனம் அமைத்திருக்கும் ராஜ்கமல், கங்காதர் பற்றி ஸ்பெஷலாக குறிப்பிட வேண்டும். சின்மயி பாடியிருக்கும் அழகனே என் அழகனே பாடல், பிற‌ை சூடனின் தொடுவது கொடு, மடைதிறப்பது இசையே பாடல்களும், பாடல் காட்சிகளும் ஓ.கே.!

பிரேம் சங்கரின் ஒளிப்பதிவு பல இடங்களில் பாராட்டு பெறுகிறது. கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் பொறுப்பேற்றுள்ள எஸ்.வி.சோலைராஜாவின் நீயும் நானும் இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் பிடிக்கும்!

 

இனிது இனிது

கலக்கலான.. கலர்புல்லான கல்லூரி கலாட்டா காதல் கதைதான். ஆனால் வழக்கமான கதைகளில் இருந்து சற்றே வித்தியாசப்பட்டு விறுவிறுப்போடு வெளிவந்திருப்பதுதான் இனிது இனிது படத்தின் பெரிய ப்ளஸ்.

பணக்கார வீட்டு பசங்க மட்டுமே படிக்கக் கூடிய அல்ட்ரா மார்டன் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் வந்து சேரும் முதலாண்டு மாணவர்கள் சந்திக்கும் ராகிங், லவ், சென்டிமெண்ட், பிரண்ட்ஷிப், இத்யாதி.. இத்யாதி விவகாரங்களையும், கோர்வையாக்கி செம ஜாலி போர்வையாக்கி இருக்கும் இயக்குனர் கே.வி.குகனுக்கு இனி, ஒவ்வொரு கல்லூரி ஆண்டுவிழாவிலும் பாராட்டு விழாவும், சிறப்பு விருந்தினர் அந்தஸ்தும் கிடைக்குமென்பது நிஜம்.

சீனியர் மாணவர்கள் ராகிங் எனும் பெயரில் செய்யும் சேட்டைகள், கலாட்டாக்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் ஒரு ஹீரோ, தன் காதலிக்காக சீனியர் லீடரையே அடிக்கத் துணிவதும், அதனால் அவரும் அவரது கூட்டாளிகளும் பிற்பாடு பெரும்பாடு படுவதும் ஒருபுறம். மற்றொரு நாயகரோ இங்கிலீஷ் ‌லக்ஷரரை ஒன் சைடாக லவ்வுவதும் – அவரை லக்ஷரர் தன் ரூமிற்கு அழைத்துப் போய் தனதக்கு வந்த லவ் லட்டர்களை கொட்டி காண்பித்து புத்தி சொல்வதும், அதன் பின்னும் திருந்தாத அந்த மாணவரால் இளம் வயது இங்கிலீஷ் ‌லக்ஷரர் டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போவதும் செம கலாட்டா. மற்றொரு பக்கம்… சீனியர் மாணவிக்கு லவ்வை ‌தெரியப்படுத்தி விட்டு அந்த காதல் கசிந்துருக, முதல்நிலை மாணவனின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும், அவர் விட்டுக் கொடுத்ததால்தான், தான் விரும்பிய என்ஜினியரிங் சப்ஜெக்ட் கிடைத்தது என்பது தெரியாமலேயே சீனியர் மாணவரின் தங்கையை காதலிக்கும் திமிரில் சுற்றித்திரியும் ஹீரோ காதலியால் படும் ஏமாற்றங்களையும் காட்டி படத்தை வெறும் ராகிங் – லவ் என்றில்லாமல் சென்டிமெண்ட்டாகவும் டச் செய்து படம் முழுக்க பிரண்ட்ஷிப்பின் புனிதத்தை போற்றி இருக்கிறார்கள்.

நான்கு கல்லூரி நண்பர்கள் அவர்களது நான்கு பெண் தோழிகள் கம் காதலிகள்… இதுதான் கதை என்றாலும் அ‌ந்த கதையை காட்டி நோகடிக்காமல் எவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் படமாக்க முடியுமோ, அவ்வளவு அழகாகவும், அற்புதமாகவும் படமாக்கி இருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.குகன்.

இயக்குனரின் எண்ணம் புரிந்து அதித் – ரேஷ்மி, நாராயண் – சோனியா, விமல் – பெனாஸ், ஷரண் – ஷியாஉமர் ஆகிய நான்கு ஜோடிகளும் கல்லூரி மாணவர்கள் கம் காதலர்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். இவர்களைப் போன்றே சீனியர் மாணவர்களாக வருபவர்களும் செம கலாட்டா ரகம். காதலிக்காக சீனியர் மாணவரை அடிக்கும் சித்தார்த், எதற்கெடுத்தாலும் எம்.எல்.ஏ. மகன் தெரியுமா நான்… என கலாய்க்கும் விமல், சினியம் மாணவி சோனியாவிடம் எனக்கும் சுருட்டை முடி… உனக்கும் சுருட்டை முடி என ஐக்கியமாகி அவருக்காக கூண்டில் தினமும் ஒரு கோழி வளர்க்கும் டைசன், காதலியை நம்பி நட்பை உதறும் ஷங்கர் என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதத்தில் நம்முள் ஊடுறுவ… மிக்கி ஜே.மேயரின் பிரமாதமான இசையும் ஒரு பின்னணிக் காரணம்.

 

வம்சம்

தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த ஜாதி? வியாதி எல்லாம் பாண்டி? கதைப்படி மது,சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும் அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.

எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல. கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு. வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம். ஆனாலும் பெண்களை அடிக்கமாட்டாங்க நம்ம வம்சத்தில் என பெருமையாக சொல்லும் அந்த வம்சத்தில் சூதாடியாகவும், ஊதாரியாகவும் சுற்றி திரியும் கிஷோர் குமாரை அருள்நிதியின் அம்மா பெருந்தன்மையாக பேசுவது நெருடலாக இருக்கிறது. மதுவும் சூதுவும் கூட ஒரு வம்சத்தில் பெருமை சேர்க்கும் பட்டியலில் எப்போது சேர்ந்தது? எப்படி? எவ்வாறு சேர்ந்தது..? என்பது புரியாத புதிர்!

படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது… ஒரே ஜாதியின் பெருமை பேசுவதுஎன நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும்அம்சமாக இருந்திருக்கும். தன் மகனுக்காக மோகனா மூவிஸ் மு.க. தமிழரசு., மக்கள் தொடர்பு நிகிலில் தொடங்கி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை தாஜ்நூர், எழுத்து இயக்கம் பாண்டிராஜ் என எல்லோரையும் பார்த்து பார்த்து பொறுக்கி எடுத்திருக்கிறார். அதேபோல் ஒரே ஜாதியை உயர்த்தி பிடிக்கும் கதையை தவிர்த்து ஜனரஞ்சகமான கதையையும் தேர்ந்தெடுத்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும். ஆகமொத்தம் அது இல்லாதபட்சம் வம்சம் அம்சமும் அல்ல! துவம்சமும் அல்ல!

 

காதல் சொல்ல வந்தேன்

வழக்கமான கல்லூரி காதல் கதைதான். ஆனால் அதை சற்றே வித்தியாசப்படுத்தி சீனியர் மாணவி மீது ஜூனியர் மாணவருக்கு ஏற்படும் காதலாக முடிவில் நிறைவேறாத சோகக்காதலாக சூடாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் பூபதி பாண்டியன். திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, தேவதையை கண்டேன் படங்களின் இயக்குநர் இயக்கியுள்ள ஒரே காதல் படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. கதைப்படி பள்ளியில் ஒன்றாக படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் பிரபு எனும் பாலாஜியும், சபேஷ் கார்த்திக்கும். ஜாலி பேர்வழிகளான இவர்களை சீனியர் மாணவிகள் சிலர் ராக்கிங் செய்ய அதில் ஒருத்தியான சந்தியா எனும் மேக்னா சுந்தரையே காதலிக்கத் தொடங்குகிறார் பிரபு. ஒல்லி பிரபு குண்டு சபேஷ் கார்த்திக் இவர்களது சுட்டித்தனத்தால் கவரப்பட்ட சந்தியாவோ இவர்களை தம்பியாக கருதி பாசத்தை பொழிய பிரபு பாலாஜியோ அது தெரியாமல் சந்தியாவை உயிருக்கு உயிராய் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தியாவிற்கு பாலாஜியின் காதல் தெரியவர கடுப்பில் அவரை விட்டு ஒதுங்கிறார். ஆனாலும் அவரை தொடர்ந்து காதலிக்கும் பாலாஜியின் காதல் நிறைவேறியதா இல்லையா? என்பது யாரும் எதிர்பாராத வகையில் படமாக்கி இருக்கும் நெஞ்சை உருக்கும் கிளைமாக்ஸாகி இருக்கிறது.
பிரபுவாக பாலாஜி, சந்தியாவாக மேக்னா சுந்தர் இருவரும் பாடத்திற்கேற்ற தேர்வு. இண்டெர்வெல்லுக்கு முன் அக்கானு கூப்பிடு.. என மேக்னா சுந்தர் கூறும் இடத்தில் பிரபு, மேக்னா இருவரது நடிப்பும் சபாஷ் சொல்லும் அளவு பிரமாதம். இயற்கை உபாதையின் சப்தத்தை செயற்கை மிஷின் ஒன்றின் மூலம் தன் குண்டு உடம்பின் மூலம் உண்டாக்கும் சபேஷ் கார்த்திக் செம காமெடி. சின்ன சின்ன காட்சிகளில் கூட டைரக்டர் டச் எனப்படும் தன் தனித்தன்மையை நிருபித்து இருக்கிறார் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் ஜி.பூபதி பாண்டியன். ஆனால் கிளைமாக்ஸில் காதலர்களை சேரவிடாது உருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாயகரை நாயகியின் கண் எதிரே அவர்கள் தினமும் பயணிக்கும் பேருந்து சக்கரத்திற்கே பலியாக்குவது நம்பும் படியாக இல்லை. யுவன்சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து பாடல்களும் , ராஜாவின் ஒளிப்பதிவும், பிரவீன் – ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பும் படத்தின் பெரும்பலம். ஆகமொத்தத்தில் தூய்மையான நல்ல காதலை சொல்லவந்துள்ள படம் காதல் சொல்ல வந்தேன்.